தினமலர் செய்தி : சென்னை: 'நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பிக்கவே, அ.தி.மு.க., பொது செயலர்
ஜெயலலிதா தரப்பினர் அபராத தொகையை கட்டியிருக்கின்றனர் என்றால், தாங்கள்
செய்த குற்றத்தை அவர்களே, ஒப்புக் கொண்டு விட்டனர் என்று தான் பொருள்' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் ஜெயலலிதா தரப்பினர், இப்போது அபராத தொகையை கட்டியிருக்கின்றனர் என்றால், தாங்கள் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர் என்று தான் பொருள்.ஜெயலலிதாவை போல, வேறு யாராவது 17 ஆண்டு காலம் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்படவுள்ள நேரத்தில், தப்பிக்க வேறு வழியில்லாமல், அபராத தொகையை தானே கட்டி விடுவதாகக் கூறினால், அதை வருமான வரித்துறை ஏற்றுக் கொள்ளுமா?
ஜெயலலிதா சமாதானமாகச் செல்லாமல், நீதிமன்றம் தண்டனை விதித்திருக்குமானால், வரி ஏய்ப்பு தொகை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அபராதத்துடன் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள், அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த தண்டனையிலிருந்து தப்பிக்கவே, ஜெயலலிதா தரப்பினர் பிடிக்க வேண்டியவர்களை பிடித்து, வருமான வரித்துறையுடன் சமரசம் கண்டு விட்டோரோ என்றும், கூறுகின்றனர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
Comments