கிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே; மத்திய அமைச்சர் பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு


தினமலர் செய்தி : புதுடில்லி: இந்த நாட்டில் வாழும் அனைவரும், கிறிஸ்துவர் , முஸ்லிம் மக்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகளே, இதனை ஏற்று கொள்ளாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என டிலலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது.
அமைச்சர் டில்லி கூட்டத்தில் பேசியதாவது: இந்த நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகளே, கிறிஸ்துவர், முஸ்லிம்களும் கூட ராமரின் பிள்ளைகள் தான். இந்தியாவில் இருந்து யார் ஒருவர் வெளிநாடு சென்றாலும் நாம், அனைவரும் இந்துஸ்தானி என்று தான் சொல்கிறோம். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். டில்லியில் வரும் காலத்தில் ராமரின் மகன் ஒருவனே ஆட்சி செய்ய போகிறான் . டில்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி வேண்டுமா ? சட்ட விரோதிகள் ஆட்சி வேண்டுமா ? டில்லி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அவையின் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சாத்வி, பேசுகையில், நான் யாரையும் புண்படுத்தும் விதமாக பேசவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று பதில் அளித்தார்.

ஆனால் எதிர்கட்சியினர், மன்னிப்பு மட்டும் போதாது. அமைச்சர் பேச்சு ஒரு குற்றச்செயல். மத துஷ்வேத கருத்தை கூறியுள்ளார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சொன்ன சமாதானத்தையும் எதிர்கட்சியினர் ஏற்று கொள்ள மறுத்து விட்டனர். அமைச்சர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என மார்க்., கம்யூ தரப்பில் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

பிரதமர் அறிவுரை: பேச்சை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள் .பா.ஜ., எம்.பி.,க்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றும், பொதுவான விஷயங்களில் கருத்துக்களை கூறக்கூடாது என்றும், கூறி உள்ளார். இதன் மூலம், சத்வியின் பேச்சை பிரதமர் மோடி மறைமுகமாக கண்டித்துள்ளார்.

Comments