பிசிசிஐ தலைவராக இருக்க விடுங்கள்: சுப்ரீம் கோர்ட்டிடம் சீனிவாசன் கெஞ்சல்

தினமலர் செய்தி : புதுடில்லி : பிசிசிஐ தலைவராக தன்னை மீண்டும் தேர்வு செய்தால் இனி ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரங்களில் தலையிடாமல் விலகி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று ஆஜரான சீனிவாசன் இதனை தெரிவித்துள்ளார்.


தலைவர் பதவி வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றும் நடைபெற்றது. இவ்வழக்கில் முக்தல் குழு அளித்த அறிக்கை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று ஆஜரான சீனிவாசன், தன்னை மீண்டும் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், தன்னை பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தால் இனி ஐபிஎல் தொடர்பான எந்த விவகாரங்களிலும் தான் தலையிட போவதில்லை என்றும், இவ்வழக்கில் தான் குற்றமற்றவர் என அறிவிக்கப்படும் வரை ஐபிஎல் விவகாரங்களில் இருந்து விலகியே இருக்க போவதாகவும் தெரிவித்தார். சீனிவாசனின் இந்த கோரிக்கையை பிசிசிஐ கடுமையாக எதிர்த்தது. மேலும் முத்கல் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே சீனிவாசனுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படாவிட்டால் கிரிக்கெட் விளையாட்டே சிதைந்து விடும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

மெய்யப்பனை காப்பாற்ற முயற்சி : சென்னை அணியின் உரிமையாளரான குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், இந்தியா சிமிண்ட்ஸ் தரப்பின் வாதம் நடைபெற்றது. இதில், ஐபிஎல் போட்டிகளின் போது குருநாத் மெய்யப்பன் தனது வீட்டிலேயே பெட் செய்ததாகவும், அது அவரது சொந்த விவகாரம் எனவும், விளையாட்டு நடைபெற்ற மைதானத்தில் குருநாத் பெட்டிங்கில் ஈடுபடவில்லை எனவும் இந்தியா சிமிண்ட்ஸ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்தியா சிமிண்ட்சின் இந்த வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், இடம் முக்கியமல்ல. எங்கு நடந்தாலும் பெட்டிங், பெட்டிங் தான் என்றது. மேலும் இது அவரது சொந்த விவகாரம் ஆக கருத முடியாது என கோர்ட் தெரிவித்துள்ளது.

Comments