10 லட்சம் பேர்:
நடிகர் விஜய்க்கு, தமிழகம் முழுவதும், 3,500 ரசிகர் மன்றங்கள் உள்ளன;
அதில், 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். 'தீவிர அரசியலில்
ஈடுபட வேண்டும்' என்பது, நடிகர் விஜயின் நீண்ட நாள் ஆசை.அதனால் தான், சில
ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்தார். தி.மு.க.,
தரப்புடனும் இணக்கமாக இருந்தார். பின், படம் வெளியிடுவது தொடர்பாக ஏற்பட்ட
பிரச்னையால், நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால்,
தி.மு.க.,வை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்தார்.கடந்த சட்டசபை தேர்தலின் போது,
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக மேடை போட்டு, விஜயும், அவரின் தந்தை
சந்திரசேகரும் பேசினர். தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதும்,
'தங்களால் தான் வெற்றி கிடைத்தது' என, இருவரும் பேச ஆரம்பிக்க, அதிருப்தி
அடைந்த அ.தி.மு.க., மேலிடம், இருவரையும் ஓரங்கட்டியது. இதன்பின்,
துப்பாக்கி படம், கத்தி படம் ரிலீசாவதற்கு, நடிகர் விஜய் ரொம்ப
சிரமப்பட்டார்.
வாழ்த்து:
இதையடுத்து, லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரசாரத்துக்காக தமிழகம் வந்த
பிரதமர் மோடியை, கோவையில் சந்தித்தார் விஜய். பின், அமைதியான அவர்,
சமீபத்தில், இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து மீண்ட தமிழக மீனவர்களின்
விடுதலைக்கு உதவிய, பிரதமர் மோடிக்கு, பகிரங்கமாக வாழ்த்தும், நன்றியும்
தெரிவித்தார். அதனால், விஜய், பா.ஜ.,வில் இணைவார் என்ற பரபரப்பு
கிளம்பியது.
தற்கொலைக்கு சமம்:
இந்நிலையில், புத்தாண்டில் புதுக்கட்சி ஒன்றை துவக்கி, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டார், விஜய். இதுபற்றி, தன் தந்தையான இயக்குனர் சந்திரசேகரிடம் ஆலோசனை செய்த போது, 'தற்போதைய அரசியல் சூழ்நிலையில், புதுக்கட்சி என்பதெல்லாம், தற்கொலைக்கு சமமானது. அதனால், அமைதியாக படத்தில் நடிக்கிற வேலையை மட்டும் பார். 50 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தால் போதும்' என, கூறி விட்டதாகத் தெரிகிறது.ஒரு பக்கம், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதது; மறுபக்கம் தந்தையின் அறிவுரையை மீற முடியாதது என, இருதலைக்கொள்ளி எறும்பாக, தற்போது விஜய் தவித்து வருவதாக, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments