சிட்னி பயங்கரவாத தாக்குதல் பிரச்னை முடிவுக்கு வந்தது; 2 பேர் பலி

தினமலர் செய்தி : சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டியில் பிடித்து வைக்கப்பட்ட பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரவில் ஆஸ்திரேலிய போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். போலீசார் தாக்குதலில் பயங்கரவாதி உள்ளிட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதியுடனான மோதல் முடிவுக்கு வந்ததை ஆஸ்திரேலிய போலீசார் உறுதி செய்துள்ளனர். அந்த ஓட்டலில் வெடிபொருள் ஏதும் உள்ளதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். வெடிகுண்டை கண்டுபிடிக்கும் ரோபோட்டும் ஓட்டலுக்குள் சோதனை செய்து வருகிறது. பிணையக்கைதியாக இருந்த இந்தியரும் காயமின்றி தப்பி வந்தார்.

இதனிடையே, ஓட்டலில் பிணையக்கைதியாக பிடித்து வைத்திருந்தவன் பெயர் ஹாரோன் மோனிஸ் எனவும், இவன் கடந்த 1996ம் ஆண்டு ஈரானிலிருந்து ஆஸ்திரேலியா வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவன்மீது கொலை மற்றும் பாலியல்பலாத்காரம் தொடர்பான வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பயங்கரவாதி துப்பாக்கி முனையில் பலரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர். அங்கு ஒரு பயங்கரவாத அமைப்பின் கொடி காணப்பட்டதாக தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து 5 பேர் தப்பி ஓடி வந்தனர். தொடர்ந்து பிணைக்கதைிகளை மீட்கும் பணியில் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். இரவில் மேலும் ஆறு பேர் தப்பி வந்தனர். தற்போது அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.அங்குள்ள முக்கிய அலுவலகங்களிலிருந்து பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளனர்.

பிணைக்கைதிகளின் நிலை :

10 சிற்றுண்டி விடுதி பணியாளர்கள் மற்றும் 30 வாடிக்கையாளர்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தனர். அவர்கள் அனைவரும் விடுதியில் உள்ள ஜன்னல் அருகே பயங்கரவாதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

சிட்னியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் :

பாதுகாப்பு கருதி சிட்னி நகரில் துறைமுக பாலம், அமெரிக்க தூதரகம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் விடுதி அமைந்துள்ள கட்டிடத்தில் இருப்பவர்களும், அதனைச் சுற்றி உள்ள கட்டிடத்தில் இருப்பவர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.சிட்னி நகரின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை மற்றும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் போக்குவரத்து சேவை மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என சிட்னி நகர கமிஷ்னர் தெரிவித்துள்ளார். சிட்னி நகரில் பாதுகாப்பு நிலை குறித்தும், அங்கும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா, தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருகிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் கவலை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சிற்றுண்டியில் 13 பேர் பிணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். சம்பவ இடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொடி உள்ளதாக கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிணையக்கைதிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து இது குறித்து பேசிய பிரதமர் அபாட், தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிப்போம். 13 பேரை பிடித்து வைத்துள்ள தீவிரவாதிகளின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கம் ஏதும் உள்ளதா என தெரியவில்லை. ஆஸ்திரேலியா அமைதியும், ஒருமைப்பாடும் நிறைந்த நாடு. அந்த நிலை தொடர்ந்து பாதுகாக்கப்படும். ஆஸ்திரேலியர்கள் பயமின்றி தங்களின் பணியை தொடருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

சிட்னி போலீஸ் தகவல் :

செய்தியாளர்களை சந்தித்து நிலைமையை விளக்கிய சிட்னி போலீஸ் கமிஷ்னர், நாங்கள் இன்னும் பயங்கரவாதிகளை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அவர்களின் பிடியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த பிரச்னையை நாங்கள் அமைதியான முறையிலேயே கையாள விரும்புகிறோம். பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைகைதிகளை பாதுகாப்பாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மோடி கண்டனம்:

சிட்னியில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் பலரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், துரதிருஷ்டவசமான இந்த சம்பவம் மனித இனத்திற்கு எதிரானது. மிகவும் கண்டிக்கதக்கது. அவர்கள் அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அவசர உதவிக்கு தொலைபேசி : இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை தெரிந்து கொள்ள இந்திய தூதரகம் இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. +61481453550 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு பயங்கரவாதி ? பயங்கரவாதிகளிடம் இருந்து 5 பேர் தப்பி வந்துள்ளனர். தப்பியவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், ஓட்டலுக்குள் ஒரே ஒரு பயங்கரவாதி மட்டுமே இருப்பதாக நியூசவுத்வேல்ஸ் போலீசார் சந்தேகிக்கின்றனர். அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments