சபரிமலையில் வருமானம் ”கொட்டுது”: 13 நாட்களில் ரூ. 44 கோடி வசூல்

சபரிமலையில் வருமானம் ”கொட்டுது”: 13 நாட்களில் ரூ. 44 கோடி வசூல்Tamil.Oneindia செய்தி : சபரிமலை: சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வருமானம் 13 நாட்களில் ரூபாய் 44 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 9 கோடி ரூபாய் அதிகமாகும். சபரிமலையில் மண்டல காலம் தொடங்கிய நவம்பர் 17 முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. கார்த்திகை 13 ஆம் தேதி வரை உள்ள கணக்குகளின் படி சபரிமலை வருமானம் 44 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 503 ரூபாயாக உள்ளளது. இது கடந்த ஆண்டு இதே நாளில் ரூபாய் 35 கோடி வருமானம் கிடைத்து இருந்தது.

இந்த ஆண்டு காணிக்கையாக ரூபாய் 16.48 கோடி, அரவணை விற்பனையில் ரூபாய் 18.17 கோடி, அப்பம் விற்பனையில் ரூபாய் 3.84 கோடி, அபிஷேகம் மூலமாக ரூபாய் 49 லட்சம் கிடைத்துள்ளது. இதனை நிருபர்களிடம் தெரிவித்த போர்டு உறுப்பினர் சுபாஷ் வாசு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை பொறுத்து அவர்களுக்கான வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றார். அவர் மேலும், சபரிமலை மற்றும் பம்பையில் நடைபெறும் அன்னதானம், பந்தளம் மற்றும் எருமேலிக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பந்தளத்தில் காலை 7.30க்கு உப்புமா மதியம் 12 க்கு சாப்பாடு இரவு 7.30 க்கு கஞ்சி வழங்கப்படும். எருமேலியில் காலை 11 மணி முதல் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் சேர்த்த கஞ்சி வழங்கப்படும். மலையேறும் பக்தர்களுக்கு உடல் உற்சாகத்தை ஏற்படுத்த இது உதவும். மாலை 6.30 முதல் கஞ்சி பயறு ஊறுகாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Comments