பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?

தினமலர் செய்தி : பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இன்னும் கோவில் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளன. இது குறித்து, அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏன் என, தணிக்கை துறை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், அறநிலைய துறையின் அலட்சியத்தால் இந்த சொத்துகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.



கடிதம்:

பழநி கோவிலுக்கான மண்டல தணிக்கை அலுவலர், அறநிலைய துறை ஆணையருக்கு, சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில் குறிப்பிடப்பட்டதாவது: கொடைக்கானலைச் சேர்ந்த, வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவர், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை, பழநி முருகன் கோவிலுக்கு சேருமாறு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலை, கொடைக்கானல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் 2003 மார்ச்சில் பதிவு செய்து, அதன் ஒரு பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பி உள்ளார். உயிலின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுத்து, சொத்துகளை கோவில் கணக்கில் சேர்க்கும்படி ஆணையர் அலுவலகத்தில் இருந்து, மதுரை இணை ஆணையருக்கு, 2004 ஜனவரியில் கடிதம் அனுப்பப்பட்டதுமதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம், உரிய நடவடிக்கைக்காக, கோவில் இணை ஆணையருக்கு, 2004 ஏப்ரலில் அனுப்பப்பட்டது. உயில் ஆவணம் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், அந்த சொத்துகள் இதுவரை கோவில் கணக்கில் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கேள்விகள்:

எழுதியவராலேயே ரத்து செய்ய முடியாத அளவுக்கு, பாதுகாப்பு செய்யப்பட்ட இந்த உயிலின் இப்போதைய நிலை என்ன, இதில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட சொத்துகளின் நிலை என்ன என்பது தொடர்பாக, தணிக்கை அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இவ்வாறு கிடைத்த உயிலை பாதுகாக்கக் கூட எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக, ஒரு கோப்பு கூட உருவாக்கப்படவில்லை. இது போன்று எத்தனை உயில்கள், தானங்கள் வரப்பெற்று உரிய நடவடிக்கையின்றி கிடக்கின்றன என்பது தெரியவில்லை என, தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சொத்துகள் விவரம்:

*கோவை மாவட்டம் வால்பாறை, கேரளாவில் மூணாறு ஆகிய இடங்களில் உள்ள இரு தேயிலை தொழிற்சாலைகள்.
*கொடைக்கானல் டவுன் பகுதியில், மூன்று வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட, 197 சென்ட் நிலங்கள்.
*வி.என்.ஏ.எஸ்., காலணி தயாரிப்பு நிறுவனத்தில் 90 சதவீத பங்குகள்.
*இத்துடன், உயில் ஆவணத்தில் குறிப்பிடப்படாத, அவர் பெயரில் உள்ள பிற சொத்துகள்.

அறநிலைய துறையில் இதுவரை கேள்விப்படாத வகையில் இந்த முறைகேடு அமைந்துள்ளது. பக்தர் கொடுத்த சொத்து என்ன காரணத்துக்காக கோவில் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதை, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரிக்க வேண்டும். இந்த காலதாமதத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.
டி.ஆர்.ரமேஷ்
செயல் தலைவர்,
ஆலயம் வழிபடுவோர் சங்கம்

Comments