ஐகோர்ட்டில் ஜெ., அப்பீல் ஆவணங்கள் ; 1 லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள் தாக்கல்

தினமலர் செய்தி : பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெ., உள்ளிட்ட 4 பேர் இன்று கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் மனு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். குற்றவாளி ஒருவருக்கு 43 ஆயிரம் பக்கங்கள் வீதம் ஒரு லட்சத்து 72 ஆயிரம் பக்கங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் விசாரித்து 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி டி.கே., குன்கா 4 பேருக்கும் சிறைத்தண்டனை விதித்தார். கடந்த செப்- 27ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது.

சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமின் பெற்று தற்போது ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களின் வீடுகளில் இருந்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டில் கடும் விவாதத்திற்கு பின்னர் ஜாமின் கிடைத்ததால் ஜெ,. தற்போது எவ்வித அரசு மற்றும் கட்சி தரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். இவர் அப்பீல் தொடர்பான ஆவணங்கள் டிசம்பர் மாதம் 18ம் தேதிக்குள் தாக்கல் செய்து விரைந்து முடிக்க துணையாக இருக்க வேண்டும். வாய்தா வாங்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது ஜாமின் உத்தரவில் கூறியிருந்தனர். 

இதனையடுத்து ஜெ., தரப்பு வக்கீல்கள் செந்தில், சசிகலா வக்கீல் அசோகன், சுதாகரன் வக்கீல் பரணிக்குமார், இளவரசி வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பீல் செய்ததற்கான பணியில் இறங்கினர். இன்று கர்நாடக ஐகோர்ட் பதிவாளர் தேசாயிடம் அப்பீல் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். குற்றவாளி ஒருவருக்கு தலா 43 ஆயிரம் பக்கம் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் அளித்த கெடுவுக்கு முன்னரே இன்றைய அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதித்துள்ளது.

Comments