எம்.பி.,யை அடிக்க பாய்ந்த அமைச்சர் : அ.தி.மு.க., தலைமையிடம் புகார்

தினமலர் செய்தி : அமைச்சர் சுந்தர்ராஜன், ராமநாதபுரம் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.பி.,யான அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்ததாக, குற்றச்சாட்டு எழுந்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் தமிழக அமைச்சரவையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்.
இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர், அன்வர் ராஜா. அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சரான இவர், ராமநாதபுரம் எம்.பி. இவர்கள் இருவருக்கும், சமீபகாலமாக ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா தண்டனை பெற்றதால், உடலை வருத்தி, இறந்து போனவர்களுக்கு, தமிழகம் முழுவதும் இழப்பீட்டு தொகை, வழங்கப்பட்டது.

மாவட்டவாரியாக இறந்து போனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இழப்பீட்டுத் தொகை வழங்கினர். பகல் 11:00 மணிக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கவும், கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், ராமநாதபுரத்தில் மட்டும் காலை 9:00 மணிக்கே, இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் அமைச்சர். அதை கேட்கப் போனதில் தான், அதே கட்சியை சேர்ந்த எம்.பி.,யான அன்வர் ராஜாவை, அமைச்சர் அடிக்கப் பாய்ந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, கட்சித் தலைமையிடம், அன்வர் ராஜா புகார் மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, அன்வர் ராஜா கூறியதாவது: ஜெயலலிதாவுக்காக உயிர் விட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி, கடந்த 1ம் தேதி காலை 11:00 மணிக்கு, தமிழகம் முழுவதும் துவக்கப்பட வேண்டும் என, கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், காலை 9:00 மணிக்கே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என, அமைச்சர் சொல்லி, கட்சியினரை, 8:00 மணிக்கே அவர் தங்கியிருந்த ராமநாதபுரம் சர்க்கியூட் ஹவுசுக்கு வரச் சொன்னார்; நானும் போயிருந்தேன். இது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது, அமைச்சர், என்னை அடிக்கப் பாய்ந்தார். இது குறித்து, தலைமையிடம் புகார் செய்தேன்.

அமைச்சர் சுந்தர்ராஜன்: நான் யாரையும் அடித்து, அரசியல் நடத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்தவன் இல்லை. ஜெயலலிதா கொடுத்தப் பதவியை வைத்து, மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறேன். அன்வர் ராஜா, கட்சியின் பொது செயலராக நடக்க முயற்சிப்பதை, ஏற்க மாட்டோம். என்னைப் பற்றி, கலெக்டர், பி.டி.ஓ., - ஆர்.டி.ஓ., என எல்லோரிடமும் புகார் தெரிவித்தார். அதை கேட்கப் போன போது, என்னை, அடிக்கப் பாய்ந்தார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Comments