இந்தியாவுடன் பேசத்தயார்: சொல்கிறார் நவாஸ் ஷெரீப்


தினமலர் செய்தி : இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை இந்தியா தான் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

பாக்., தூதர் அப்துல் பசித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்ததை அடுத்து, கடந்த ஆகஸ்டில் நடக்க இருந்த இந்தியா - பாக்., வெளியுறவுத் துறை இணை செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நின்று போனது.
செப்டம்பரில், அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா., பொதுசபை மாநாட்டில், கலந்து கொண்ட போதிலும், இரு பிரதமர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில், சார்க் மாநாட்டின் போது, மோடி, ஷெரீப் சந்திப்பார்களா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏதுமில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்,இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.


இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கான முயற்சியை இந்தியா தான் செய்ய வேண்டும். நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை துவக்குவது இந்தியாவின் கையில் தான் உள்ளது.அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயார். இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடமும் கேட்க வேண்டும் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையை இந்தியா தான் ரத்து செய்தது. சார்க் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என கூறினார்.

Comments