திறப்பு விழா இல்லாத ஓ.பி.எஸ்., ஆட்சி

தினமலர் செய்தி : தமிழக முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று, 50 நாட்களை கடந்துள்ளார். எனினும், அடுத்தடுத்து வரும் பிரச்னைகள், அவரை திணறடித்து வருகின்றன.

செப்டம்பர் முதல்...:

புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம், கடந்த செப்டம்பர் 29ல் பொறுப்பேற்றார்.
ஏற்கனவே, 2001 செப்டம்பர் 21ல், பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, 2002 மார்ச் வரை அப்பதவியில் இருந்தார்.இரண்டாவது முறையாக, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று, நேற்றுடன், 57 நாட்கள் நிறைவு பெற்றன.இம்முறையும், அவர் தன்னிச்சையாக செயல்படாமல், ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படுகிறார்.பதவியேற்ற, 50 நாட்களில், புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா எதிலும் பங்கேற்கவில்லை.தினமும், தலைமைச் செயலகம் வருகிறார். தன்னிடம் வரும் கோப்புகளில், உடனுக்குடன் கையெழுத்திடுகிறார்.ஜெயலலிதாவிற்கு செயலராக இருந்தவர்களே, பன்னீர்செல்வத்திற்கும் செயலர்களாக தொடர்கின்றனர். முதல்வர் பதவியில் இருந்தாலும், சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை; உறவினர்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பிரச்னைகள்:


முதல்வர் பதவியேற்றதில் இருந்து, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை; காவிரியில் அணை கட்ட, கர்நாடக அரசு முனைவது; தமிழக மீனவர்கள் பிரச்னை; பருப்பு மற்றும் முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு என, அடுக்கடுக்கான பிரச்னைகளை, பன்னீர்செல்வம் எதிர்கொண்டு வருகிறார்.

இலங்கை பிரச்னை தீர இரண்டு அணுகுமுறைகள்:பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று எழுதிய கடிதம் விவரம்:நேற்று முன்தினம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம், மீன்பிடி தளங்களில் இருந்து, மூன்று படகுகளில், மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.தமிழக மீனவர்கள், பாக் நீரிணையில், தங்களுடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில், மீன் பிடிக்கும்போது, அவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில், இலங்கை அதிகாரிகள் மீண்டும் ஈடுபட்டுள்ளதை, இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.இதுதவிர, ஏற்கனவே, தமிழகத்தை சேர்ந்த 24 மீனவர்கள், இரு மாதங்களுக்கு முன், கைது செய்யப்பட்டு, இலங்கை காவலில் உள்ளனர். மேலும், 75 மீன்பிடிப் படகுகள், இலங்கை கட்டுப்பாட்டில் உள்ளன. இது தமிழக மீனவர்களிடம், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, இரண்டு விதமான அணுகுமுறைகள் அவசியம். மத்திய அரசிடம் இருந்து, 1,520 கோடி ரூபாய் நிதியுதவிக்கு அனுமதி; கடல் ஆழத்தை பராமரிக்க, ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் தொடர் மானியம் அளிப்பது, முதல் அணுகுமுறை. தமிழக மீனவர்கள், பாக் நீரிணைப் பகுதியில், மீன்பிடிக்க ஏதுவாக, கச்சத்தீவை மீட்பது, இரண்டாவது அணுகுமுறை. இப்பிரச்னையை உடனடியாக எடுத்துக் கொள்ளும்படி, வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு, பிரதமர் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Comments