தினமலர் செய்தி : புதுடில்லி: சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த தமிழக ஜெயந்தி
நடராஜனிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக
அத்துறை அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. தனியார் தொழில் நிறுவனத்திற்கு
வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த
புகாரை அடுத்து இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சி.பி.ஐ.,
துவக்கியிருக்கிறது.
காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர் ஜெயந்திநடராஜன். 2011 முதல் அமைச்சராக இருந்த இவர் மீது ஊழல் புகார் காங்., தரப்பிற்கு வந்த போது ராகுல் தலையீட்டின் பேரில் இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து காங்., நீக்கியது. ஆனால் அரசியல் கட்சி விவகாரம் கவனிக்க பதவியை துறந்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் கூறி வந்தன.
எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடிவு?: இந்நிலையில் சி.பி.ஐ., தீவிரமாக விசாரித்ததில் ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் சிங்பும் மாவட்டத்தில் 512. 43 ஹெக்டேர் நிலம் ஒதுக்கியதில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும், தொடர்ந்து நிலம் ஒதுக்கப்பட்ட காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிலரை விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது. இதில் பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments