தினமலர் செய்தி : பாட்னா : கறுப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டில்லியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேசுகையில்,வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றதும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஷா தலைமையில் சிறப்புபுலனாய்வு குழு அமைக்கப்பட்டது.ஒளிவுமறைவற்ற அரசியல் நடவடிக்கைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் முழுவதையும் மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கறுப்பு பணத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Comments