கறுப்பு பண பட்டியலில் பழைய கணக்கு தகவல்கள்: செயல்படாத அறக்கட்டளைகள் பெயரிலும் டிபாசிட்

தினமலர் செய்தி : புதுடில்லி : வெளிநாடுகளில், கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள் என, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல், தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில், பல கணக்குகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு உள்ளன என்பதும், தற்போது செயல்படாத நிலையில் உள்ள அறக்கட்டளைகள், பெயரில் துவங்கப்பட்டு உள்ளன என்பதும், விசாரணையில் தெரியவந்து உள்ளது.



தொடர் முயற்சி:

சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ள, கறுப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியல், பிரான்ஸ் அரசால், மத்திய அரசுக்கு தரப்பட்டவை. இதுதவிர, வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கிய வர்கள் தொடர்பான, மற்ற பல விவரங்களையும், சுவிஸ் அரசிடம் இருந்து பெற, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. அதற்கு, சுவிஸ் அரசும், குறிப்பிட்ட காலவரையறைக்குள், இந்தியாவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சுவிஸ் போக, வேறு நாடுகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் குறித்த தகவல்களை பெறவும், மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அந்த முயற்சியில், ஜெர்மன் நாடு உட்பட, சில தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட, 627 பேர் பட்டியல் மற்றும் வேறு பல வழிகளில், மத்திய அரசு பெற்ற, கறுப்பு பண பதுக்கல்காரர்கள் குறித்த விவரங்களை ஆராய்ந்த போது, அதில், பல கணக்குகள், தற்போது யார் பெயரில் கணக்கு உள்ளதோ, அவர்களின் பெற்றோர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களால் துவக்கப்பட்டது என்பதும், தற்போது செயல்படாத நிலையில் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் கம்பெனிகள் பெயரில், பல ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கப்பட்டது என்பதும், தெரியவந்துள்ளது.

மேலும் பல 'பகீர்?'

இதுபோன்ற கணக்குகள், வெளிநாட்டு வங்கிகளில் எத்தனை உள்ளன என்பதை, மத்திய அரசால் உறுதி செய்ய முடியவில்லை. அதனால், சிலரின் அல்லது சில நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் தொடர்பாக, சுவிஸ் அரசிடம், மத்திய அரசு விளக்கம் கோரி உள்ளது. இந்த தகவல்கள் கிடைத்ததும், கறுப்பு பணம் தொடர்பான, பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments