ஹியுசிற்கு அரசு மரியாதை: சிட்னி மைதானத்தில் கவுரவம்

Phillip Hughes, australiaதினமலர் செய்தி : சிட்னி: பவுன்சர் தாக்கி மரணம் அடைந்த பிலிப் ஹியுசிற்கு சிட்னி மைதானத்தில், அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடக்க உள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில், நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்­தி­­ரே­லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக தாக்கியது.

இதில், நினைவு இழந்த ஹியுசிற்கு, தலையில் ‘ஆப்­ப­ரே­ஷன்’ நடந்தது. இருப்பினும் மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இவருக்கு சக வீரர், நண்பர் மைக்கேல் கிளார்க், வார்னர் உள்ளிட்ட, உலகின் பல்வேறு வீரர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பதை விட, ஹியுஸ் இறுதி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இதில் கலந்து கொள்வது குறித்து, சுமார் 70 ஆஸ்திரேலிய வீரர்களும், சிட்னியில் ஆலோசித்து வருகின்றனர்.

சொந்த ஊரில்...:

இதனிடையே, ஹியுஸ் உடல் அடக்கத்தை அவரது சொந்த ஊரான மேக்ஸ்விலியில் உள்ள நம்பக்கா ஆற்றங்கரையில் நடத்த, அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

அரசு மரியாதை:

இதற்கு முன், அவர் காயம் அடைந்த அதே சிட்னி மைதானத்தில் வைத்து உடலுக்கு அரசு மரியாதை தரப்படவுள்ளது. பொதுவாக அரசியல் பிரபலங்களுக்கு மட்டுமே இது போன்ற கவுரவம் அளிக்கப்படும். முதல் முறையாக கிரிக்கெட் வீரருக்கு இந்த பெருமை வழங்கப்பட உள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் தலைவர் மைக் பெயர்ட் கூறுகையில்,‘‘பிலிப் குடும்பத்துடன் ஆலோசித்து தான் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் இவரை விரும்பும் அனைவரும் மைதானத்தில் திரண்டு இறுதி மரியாதை அளிக்கலாம்,’’ என்றார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைமை அதிகாரி சதர்லாந்து கூறுகையில்,‘‘ ஹியுசிற்கு அரசு மரியாதை தருவது என, முடிவெடுத்த தலைவர் மைக் பெயர்டுக்கு நன்றி. சிட்னி மைதானத்தில் இது நடப்பதால், அனைவரும் அஞ்சலி செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.

நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் தலைமை அதிகாரி ஆன்ட்ரூ ஜோன்ஸ் கூறுகையில்,‘‘ சிட்னி மைதானத்தில் தான் ஹியுஸ், முதல் தர போட்டியில் அறிமுகம் ஆனார். இங்கு வைத்து அஞ்சலி செலுத்துவது, அவருக்கு கொடுக்கப்படும் சரியான மரியாதையாக இருக்கும்,’’ என்றார்.

இறுதி மரியாதை மற்றும் ஊர்வலம் போன்றவை அடுத்த வாரம் நடக்கும் எனத் தெரிகிறது.

Comments