ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களான கிறிஸ்துராஜா சீல்தன், ஞானப்பிரகாசம், துஷாந்தன் கமல கிறிஸ்ரியன் ஆகிய 8 மீனவர்கள் மீது போதை மருந்து கடத்தல் வழக்கு பதியப்பட்டது.
கொந்தளிப்பு:
தமிழகத்தைச்
சேர்ந்த மீனவர்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து, தூக்கு தண்டனை
வழங்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து
வருகின்றன. தமிழக மீனவர்களை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்
என, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை
சந்தித்து முறையிட்டனர். மேலும், மத்திய அரசு இப்பிரச்னையில் நேரடியாக
தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிதின் கட்காரி வருகை:
மீனவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில்,
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று ராமேஸ்வரம் வந்தார். அங்கு, சேது
சமுத்திர திட்டத்தை ஆய்வு செய்த பின்னர், இலங்கை கோர்ட்டால் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் குடும்பத்தினரை நிதின் கட்காரி
சந்தித்தார். மீனவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என அவர்களுக்கு கட்காரி
ஆறுதல் கூறினார்.
சட்டரீதியான நடவடிக்கை:
மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கட்காரி, 'இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வேதனையை தருவதாகவும், 5 மீனவர்களையும் மீட்க சட்டபூர்வமான நவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்த அவர், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்திய தூதர் சந்திப்பு:
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை, அந்நாட்டுக்கான இந்திய தூதர் இன்று சந்தித்து பேசினார். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அவர்களை சந்தித்த இந்திய தூதர் யாஷ் சின்கா, மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும், மீனவர்கள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் பேச ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
Comments