தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள்: இந்திய சிறைக்கு மாற்றப்படுவார்களா?

தினமலர் செய்தி : சென்னை: இலங்கை கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை, இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளதாக, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு, மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.


நிதி ஒதுக்கீடு:

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. சட்டரீதியாக இப்பிரச்னையை அணுக வேண்டும் என்பதால், இலங்கையில் உள்ள பிரபல வக்கீல்களை கண்டறிந்து, அவர்கள் மூலம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை இலங்கைக்கான இந்திய தூதர் சந்தித்து, அவர்களுக்கு உணவு, உடை வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிலையில், மீனவர்களின் மேல்முறையீட்டு செலவிற்காக தமிழக அரசு 20 லட்சம் ரூபாயை ஒதுக்கி, அதை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பியது.

இன்று மேல்முறையீடு:

தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனு ஒன்றை இலங்கை கோர்ட்டில் இந்திய அரசு இன்று தாக்கல் செய்கிறது. இதன் மூலம் சட்டரீதியாக தமிழக மீனவர்களை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என மத்திய, மாநில அரசுகள் நம்புகின்றன. இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளதாக பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் தகவல்:

இது குறித்து டுவிட்டரில் தகவல் வௌியிட்டுள்ள சுப்ரமணியசாமி, 'பிரதமர் நரேந்திரமோடியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும், தூக்கு தண்டனை பெற்றுள்ள 5 தமிழக மீனவர்கள் குறித்து போன் மூலம் பேசினர். அப்போது, ஐந்து மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றக் கோரும் மனுக்களை பரிசீலிப்பதாகவும். அவர்களை இந்திய சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜபக்சே மோடியிடம் உறுதி அளித்துள்ளார்,' என்று கூறப்பட்டுள்ளது.

Comments