கொள்ளை பயத்தில் நள்ளிரவில் 'பங்க்'குகள் மூடல்?சென்னையில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு

தினமலர் செய்தி : சென்னையில், பல நாட்களாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாடு குறித்து, பெட்ரோல் 'பங்க்' முகவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:ஒப்பந்த லாரிகளுக்கு, எண்ணெய் நிறுவனங்கள், குறைந்த வாடகை வழங்குவதால், பெட்ரோல், 'பங்க்'குகளுக்கு, ஒரு நாளைக்கு, ஒரு முறை மட்டும், பெட்ரோல், டீசல் அனுப்பப்படுகிறது.
இதனால், அதிகஅளவில், வினியோகிக்க முடியவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஆனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் காரணமோ, 'திடுக்'கிட வைக்கிறது. 'இரவில், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால், 10:00 மணிக்கு மேல், பெட்ரோல் விற்பனை செய்ய, உரிமையாளர்கள் முன்வருவதில்லை. இதை மறைக்க, 'பெட்ரோல் இல்லை' எனக் கூறுகின்றனர்' என்கின்றனர்.

தினசரி சப்ளை நிலவரம்தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 7,500; தனியார் நிறுவனங்களுக்கு, 300 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன.ஆண்டுதோறும், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை முறையே, 20 கோடி லிட்டர் மற்றும் 60 கோடி லிட்டர் என்றளவில் உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுகத்திற்கு, கப்பல்களில் கொண்டு வரப்படும், கச்சா எண்ணெய், அத்திப்பட்டு, மணலி உள்ளிட்ட இடங்களில் உள்ள, எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின், அங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட 'பங்க்'குகளுக்கு, சில்லரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

Comments