தினமலர் செய்தி : பெங்களூரு : அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் பள்ளிகளை மூட
வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பள்ளிகளில்
படிக்கும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி
உள்ளது.
அனுமதி பெறாமல் இயங்கி வந்த பள்ளி ஒன்றில் அக்டோபர் மாதம் 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பள்ளியை மூடவும், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றவும் கர்நாடக அரசு உத்தரவிட்டது.
பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்ததை அடுத்து, அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளை கண்டறிந்து அப்பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் அனுமதி பெறாத பள்ளிகளை கண்டறியும் நடவடிக்கையில் கர்நாடக கல்வித்துறை இறங்கி உள்ளது. இது குறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் கூறுகையில், அனுமதி பெறாத பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அனுமதி பெற்றவை தானா என பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அனுமதி பெறாமல் 2000 பள்ளிகள் இயங்கி வருவதாக இதுவரை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் ரோகன் ஜோஷி கூறுகையில், இந்த பள்ளிகளில் ஒரு பள்ளியில் 250 முதல் 260 குழந்தைகள் வீதம் சுமார் 3.5 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். வருடத்தின் பாதியில் திடீரென பள்ளிகள் மூடப்படுவதால் குழந்தைகளின் படிப்பும், அவர்களின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அரசு அளித்துள்ள பட்டியலில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இதனால் அரசின் இந்த நடவடிக்கை கல்வி துறையையும், கல்வி திட்டத்தையும் கடுமையாக பாதிக்கும் என பள்ளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments