இரு தினங்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்

தினமலர் செய்தி : சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், இன்னும் இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து நேற்று வரை, 33 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பருவமழைக் காலம் முடிய, இன்னும், 40 நாட்கள் உள்ளன. எனவே, இயல்பு அளவான, 44 செ.மீ.,ஐ தாண்டி, அதிக மழை கிடைக்கும் என கூறப்படுகிறது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், 20ம் தேதி, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் - மண்டபம், பாம்பன் பகுதிகளில், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து, தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.காற்றழுத்த தாழ்வு நிலை, தென்மேற்கில் நகர்ந்து வந்தால் மட்டுமே, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால், இன்றும், நாளையும் என, இரு தினங்களுக்கு மழை நீடிக்கும் எனவும், நாளை, தென் கடலோர தமிழக பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Comments