பால் விலை
உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், மழையால் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்கக் கோரியும், தமிழகம் முழுவதும், தி.மு.க.,
சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.சென்னையில், சேப்பாக்கம்
விருந்தினர் மாளிகை முன், தி.மு.க., தென் சென்னை மாவட்டச் செயலர் அன்பழகன்
தலைமையில், ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான
விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளில், கருணாநிதியின் பெயர் இல்லை.அதே போல,
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, வடசென்னை தி.மு.க., சார்பில், கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.டி.சேகர், சேகர்பாபு ஆகியோர் முன்னிலை
வகித்தனர். இந்த ஆர்பாட்டத்தில், ஸ்டாலின் திடீர் என, கலந்து கொண்டார்.
சென்னையில், இரண்டு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களும், கட்சியின்
மா.செ.,க்களே முன்னின்று நடத்தி முடிப்பர் என்று தான், தலைமையில்
சொல்லியிருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில், கட்சியின் பொதுச் செயலர்
அன்பழகன், 'முக்கியமான இந்த போராட்டத்தை, மக்கள் பெரிதும்
எதிர்பார்க்கின்றனர். அதனால், தலைவர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும்,
கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்' என, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகிய
இருவரிடமும், வலியுறுத்தியதாக தெரிகிறது.அதைத் தொடர்ந்தே, இருவரும்,
சென்னையில் இரண்டு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், தனித்தனியாக கலந்து
கொண்டு, தொண்டர்களை உற்சாகப்படுத்தியதாக கூறுகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:
முதல்வராக
இருப்பவர், பதவி இழக்கிறார். அவருக்குப் பதில், மற்றொருவர் முதல்வராக
தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், புதிய முதல்வர், ஏற்கனவே இருந்தவர் தான்,
இன்னமும் முதல்வராக இருப்பது போலவே செயல்படுகிறார்.இதனால், தமிழகத்தில்
பினாமி ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.விலைவாசி உயர்வை
கட்டுப்படுத்தவில்லை; மூடப்படும் ஆலைகளைத் தடுக்கவில்லை; மழையால் குண்டும்
குழியுமான சாலையை மூடக் கூட, நிர்வாகம் செயல்படவில்லை. சீர்கெட்டுள்ள
சட்டம் - ஒழுங்கை செம்மைப்படுத்த ஆளில்லை. எனவே, தமிழகத்தில் ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்த, முதியவர்களோடு இணைந்து, இளைஞர்கள் செயல்பட வேண்டும்.
ஸ்டாலின் பேசியதாவது:பால்வளத்
துறை அமைச்சராக இருந்த மூர்த்தியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது,
அ.தி.மு.க., அரசு தான். தவறு இல்லாமலா அவரை நீக்கினர். ஆவின் கலப்பட
வழக்கில், அ.தி.மு.க., பிரமுகர் வைத்தியநாதன் கைது செய்யப்பட்டார். ஏழையாக
இருந்தவர், 83 வாகனங்களுக்கு சொந்தக்காரர். ஆவின் கலப்படத்தால்,
வைத்தியநாதனுக்கு பல கோடி வருமானம்; அரசுக்கு இழப்பு.ஆனால், இழப்பை மக்கள்
ஈடுகட்ட வேண்டுமாம்.அ.தி.மு.க., அரசு, மின் கட்டணத்தையும் நான்கு மடங்கு
உயர்த்தி உள்ளது. தி.மு.க., ஆட்சியில், அமல்படுத்தப்பட்ட மின் திட்டங்களை
நிறைவேற்றி இருந்தால், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. ஒரு
யூனிட் மின்சாரம் வாங்க, 13 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. அதிலும்,
மக்கள் வரி பணம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள்
பேசினர்.
Comments