சட்டசபை இணையதளத்தில் மாற்றம்: ஜெ.,க்கு பதில் ஓ.பி.எஸ்., பெயர்

தினமலர் செய்தி : சென்னை : புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று, ஒன்றரை மாதங்களுக்கு பின், சட்டசபை செயலக இணையதளத்தில், அனைத்து பகுதிகளிலும், ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றதால், ஜெ., முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பதவியையும் இழந்தார். அதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கு மேலாகியும், சட்டசபை இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதா என்றே இருந்தது. பலதரப்பில் இருந்தும், நீண்ட வலியுறுத்தல்களுக்குப் பின், கடந்த வாரம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியிடம் என அறிவிக்கப்பட்டது. சட்டசபை செயலகம் இணையதளத்திலும், காலியிடம் என்ற அறிவிப்பு வெளியானது.இதன் தொடர்ச்சியாக, நேற்று, சட்டசபை செயலகம் இணையதளத்தின் அனைத்து பகுதிகளிலும், ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டு, முதல்வர் என்ற இடத்தில், ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது.இனி மற்ற அரசு துறைகளும், இம்முறையை பின்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, அரசு அலுவலகங்களில் முதல்வர் படமாக ஜெயலலிதா படம் இடம் பெற்றிருப்பதும், படிப்படியாக மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிகிறது.

Comments