இரு ஆண்டுகளாக ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை, இந்தாண்டு போதிய அளவில் பெய்துள்ளது.
சாகுபடி பரப்பு ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், யூரியா தட்டுப்பாடும் உருவாகி உள்ளது. இதனால், அவற்றின் விலையும் இருமடங்கு கூடியுள்ளது. வழக்கமாக, 280 ரூபாய் வரை விற்கப்படும், 50 கிலோ யூரியா மூட்டை, தற்போது, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பயிர்களை காக்க, கூடுதல் விலை கொடுத்து அவற்றை வாங்க, விவசாயிகள் தயாராக இருந்தாலும் கிடைப்பதில்லை. இதனால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
நாங்கள் கேட்போம்; பயிர்கள் கேட்குமா?
டெல்டா மாவட்ட, விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மழையில் நெற்பயிர்கள் ஒரு வாரம் மூழ்கினாலும், தாக்கு பிடிக்கும். ஒரு வாரத்திற்குள், தண்ணீரை வயல்களில் இருந்து வடித்து விட்டால், பயிர்களை காப்பாற்றி விடலாம்.அதன்பின், உடனே பயிர்களில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். களைகளை அகற்றிய உடன், யூரியா உரத்தை பயிர்களுக்கு இட வேண்டும். அப்போது தான், பயிர்கள் பச்சைகட்டி நன்று வளர்ச்சி அடையும். இல்லையெனில், மகசூல் குறைவு, பயிர் அழுகல் பிரச்னைகள் ஏற்படும். ஆனால், தட்டுப்பாடு காரணமாக யூரியா கிடைக்கவில்லை. கடந்த மாதம் ஆந்திராவில் வீசிய புயலால், விசாகப்பட்டினத்திற்கு கப்பலில் உரங்கள் வருவது, தாமதமானதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அதே நேரத்தில், உரங்கள் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளதாகவும் சொல்கின்றனர். பொட்டாசியம், டி.ஏ.பி., போன்ற உரங்கள், கூட்டுறவு மற்றும் தனியாரிடம் கையிருப்பில் உள்ளது. யூரியாவிற்கு தொடர்ந்து தட்டுப்பாடு உள்ளது. அதிகாரிகள் சொல்வதை நாங்கள் கேட்டுக் கொள்வோம்; பயிர்கள் கேட்குமா?. அடுத்த சில நாட்களில், யூரியா கைக்கு கிடைக்காவிட்டால், பயிர்கள் பாதிப்பதை தடுக்க முடியாது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments