நெல்லையில் கொட்டிதீர்த்தது மழை; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு

தினமலர் செய்தி : திருநெல்வேலி: நெல்லை , தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. பாபநாசம் அணை ஒரே நாளில் 3.25 அடி உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்துவருகிறது. விடிய விடிய மழை கொட்டியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. நெல்லை மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமையை விட ஒரே நாளில் 3.25 அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 143 அடியாகும். அணைப்பகுதியில் 132 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 635 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. மாவட்டம் முழுவதும் பலத்தமழை பெய்வதாலும், தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் செல்வதாலும் அணை நீர் வெளியேற்றப்படாமல், மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் தாமிரபரணியில் மழைநீர் இருகரைகளையும் தொட்டபடி ஓடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 188 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. காயல்பட்டணத்தில் 175 மி.மீ., நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 165 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 93 மி.மீ., சேரன்மகாதேவி 92 மி.மீ.,மூலைக்கரைப்பட்டியில் 96 மி.மீ., ராதாபுரம் 139 மி.மீ., ஆலங்குளம் 113 மி.மீ.,மழை பதிவானது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் காலை 139.99 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் காலை 87.90 அடியாக உயர்ந்தது.
வெள்ளப்பெருக்கு..! நெல்லையில் விடிய விடிய மழை பெய்ததால், மாநகராட்சி பகுதியில் அனேக இடங்கள் நீரில் மிதந்தன. குறிப்பாக நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் செல்லமுடியாமல் தேங்கியது. மேயர் புவனேஸ்வரி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று அடைப்புகளை சரிசெய்தனர். ஜங்ஷன் ஓடையில் மதுபானபாட்டில்கள் அதிக எண்ணிக்கையில் போடப்பட்டிருந்ததால், அடைப்பு ஏற்பட்டது.
2 பேர் பலி ; ஒருவர் மாயம்: நெல்லை மாவட்டம் ஆத்தங்கரைபள்ளிவாசல் அருகே காட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நாகூர்மீரான், திசையன்விளையை சேர்ந்த முத்துராமன் ஆகியோர் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் முத்துராமன் மீட்கப்பட்டார். நாகூர்மீரான் நிலை தெரியவில்லை. நெல்லையை அடுத்துள்ள சிறுக்கன்குறிச்சியில் விவசாய பணிக்கு சென்ற முப்பிடாதி 48, மின்னல் தாக்கி பலியானார். தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் குளங்கள் நிரம்பி தண்ணீர் ரோடுகளில் பாய்ந்தது. 

Comments