பிரியங்காவால் மட்டுமே காங்கிரசை காப்பாற்ற முடியும்: பரத்வாஜ்

தினமலர் செய்தி : புதுடில்லி : தற்போதைய சூழலில், பிரியங்காவால் மட்டுமே காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற முடியும் என முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கவர்னருமான பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் மண்ணை கவ்விய கையோடு, தற்போது மகாராஷ்டிரா மற்றும் அரியானாவிலும் ஆட்சியை இழந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது காங்கிரஸ்.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலனடைந்தவர்கள் தற்போது ஆட்சியையும், கட்சியையும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கவர்னருமான பரத்வாஜ் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்சை ரத்து செய்யக்கோரி, மன்மோகன் சிங்கிடம் சிதம்பரம் ஒருபோதும் கூறவில்லை. மன்மோகன் சிங் அமைச்சரவையில் சிதம்பரமும் ஒருவர். தனது கருத்தை பிரதமர் ஏற்க வில்லை என்று கூறுவது தவறு. மேலும் தற்போது காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள நிலையில், பிரியங்காவால் மட்டுமே காங்கிரஸ் கட்சியை மீட்க முடியும். காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் பங்கை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு பரத்வாஜ் தெரிவித்தார்.

Comments