ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டம்: பிரதமர் மோடி பேச்சு

தினமலர் செய்தி : கவுகாத்தி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, நாட்டிலுள்ள ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேகாலாயாவின் மெந்திபூர்-கவுகாத்தி முதல் ரயிலை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பைராடி-மிசோரமின் சைராங் இடையிலான சரக்கு ரயில் பாதைக்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல தான், தற்போதும் ரயில் சேவைகள் இருக்கின்றன. ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்குவதன் மூலம், அவற்றை நவீனப்படுத்த முடியும். இதற்காக 10 முதல் 12 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்படும். ரயிலை ஏழைகள் தான் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். விமானநிலையத்தில் உள்ள வசதிகளை விட ரயில் நிலைய வசதிகள் மேம்படுத்தப்படும். ரயில்வே சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும் நிலையில், ரயில்வே தனது இடங்களில், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்ற வசதிகளை அனுமதித்து தனதுநோக்கத்தை ரயில்வே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், ரயில்வே நிலையங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு பரிசீலனை செய்யும்

நாட்டின் பொருளாதார நடவடிக்கையின் முதுகெலும்பாக இந்திய ரயில்வே உள்ளது. ஒருகோச் இணைப்பதினாலோ, ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்துவதாலோ மட்டும் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. ரயில்வேயில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இதுவே இந்திய பொருளாதாரத்தை இழுத்து செல்லும் இன்ஜீனாக இருக்கும். நாட்டின் ரயில்வே போக்குவரத்தை நவீனப்படுத்த, ரயில்வேயில் 100 சதவீத அன்னிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் நான்கு மூலைகளிலும் 4 ரயில்வே பல்கலை., துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு ரயில் சேவை குறித்து அனைத்தும் கற்பிக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு மிகவும் முக்கியம். வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்றுவதன் மூலம், நாட்டையும் முன்னேற்றலாம். நடுத்தர வர்க்கத்தினர், ஆண்டிற்கு இரு முறை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் நல்ல இடங்களை தேடி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களை மற்ற இடங்களுடன் இணைத்தால், அவர்கள் இங்கு வருவார்கள். உள்கட்டமைப்பை மேம்படுத்தினால், மற்றவற்றை பொது மக்களே நிறைவேற்றுவார்கள். லுக் ஆக்ட் பாலிசியை முன்னெடுத்து செல்ல வேண்டும். நம்மிடம் லுக் ஈஸ்ட் பாலிசி உள்ளது. தற்போது ஆக்ட் ஈஸ்ட் பாலிசி தற்போது நம்மிடம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியின் மையமாக இருக்கும் என கூறினார்.

Comments