குடியரசு தின விழா: மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ஒபாமா

தினமலர் செய்தி : புதுடில்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வரும்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஒபாமா ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுகிறார்.
இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. மோடியின் அழைப்பை ஏற்று, ஒபாமா, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா செல்வார் என்றும், டில்லியில், பிரதமர் மோடி மற்றும் இந்திய உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறியுள்ளது.

ஒபாமாவுக்கு விடுத்த அழைப்பு தொடர்பாக, பிரதமர் டுவீட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: இந்த குடியரசு தின விழாவில், நமது நண்பர் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. விழாவில் முதல் அமெரிக்க அதிபராக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும்படி ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என கூறியுள்ளார். ஒபாமா கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக மோடி பதவியேற்றபின், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்தார். ஒபாமாவும் மோடியும் வெள்ளை மாளிகையில், இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐ.நா.,வில் உரையாற்றிய அவர் , நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் சதுக்கத்தில், இந்தியர்கள் மத்தியில் பேசினார்.வெள்ளை மாளிகையில், இருவரும் சந்தித்தபோது, பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. பாதுகாப்பு மற்றும் பொருளாதார உயர்வுக்கு இணைந்து பாடுபடுவது என இரு தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள மியன்மர் சென்ற பிரதமர் மோடி, அங்கு ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது, மோடியை, செயல்திறன் மிக்க தலைவர் என ஒபாமா புகழ்ந்தார்.

Comments