மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க தீவிரம்: வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணிப்பு

தினமலர் செய்தி : தாம்பரம்: வண்டலூர் பூங்காவில் இருந்து மாயமானதாக கூறப்பட்ட புலி, வாழிடத்தின் அடர்ந்த பகுதியில் இருந்து, எந்த நேரத்தில் வெளியே வந்தாலும், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.

கேமராவில் பதிவு:


வண்டலூர் உயிரியல் பூங்காவில், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட, புலி வாழிட அகழியின் சுற்றுச்சுவர், சமீபத்தில் பெய்த மழையால், கடந்த, 14ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. இதனால், வாழிடத்தில் பார்வைக்கு விடப்பட்டிருந்த ஐந்து புலிகளில், நேத்ரா என்ற மூன்று வயது புலி, தப்பியதாக தகவல் பரவியது. பூங்கா நிர்வாகம் அதை மறுத்து, வாழிடத்தின் அடர்ந்த வனப்பகுதியில் புலி இருப்பதாக கூறி வருகிறது. அதையடுத்து, சுற்றுச்சுவர் இடிந்த பகுதி அருகே, மூன்று கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேத்ராவின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

அதில், இரவில், அடர்ந்த வனப்பகுதியில் இருந்து, நேத்ரா வெளியே வந்து, நடமாடியது கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம், புலி வாழிடத்தை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேத்ரா அடர்ந்த பகுதியில் இருந்ததால், பார்வையாளர்களின் வசதிக்காக, பத்மா என்ற புலியை பார்வைக்கு விட்டனர். இந்த நிலையில், புலி வாழிடத்தை, வனத்துறை அமைச்சர் ஆனந்தன், நேற்று காலை ஆய்வு செய்தார். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த இடம், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இரும்பு வேலி, கேமரா காட்சிகள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

ஓரிரு நாட்களில்...:

ஆய்வுக்கு பின், அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நேத்ராவை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, மீண்டும் வாழிடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம். புலி, பகலில் வெளியே வருவதில்லை. இரவில் தான் வருகிறது. அதனால், வெளியே வருவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எந்த நேரத்தில் வெளியே வந்தாலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். மற்ற விலங்கு கூண்டுகளின் சுற்றுச்சுவர்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சண்முகம், பூங்கா இயக்குனர் ரெட்டி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments