தினமலர் செய்தி : புதுடில்லி: சென்னையில், 3,267 கோடி ரூபாய் செலவில், தமிழக அரசு
மேற்கொள்ள உள்ள, மோனோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசு கொள்கை ரீதியிலான
ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை பூந்தமல்லி - கிண்டி கத்திப்பாரா சந்திப்பு வரையிலும், இணைப்பு வழியாக போரூர் - வடபழனி வரையிலும், 20.68 கி.மீ., தூரத்திற்கு வழித்தடம் அமைகிறது.
மோனோ ரயில் எப்படி செயல்படும்?
மெட்ரோ ரயில் போக்குவரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது மோனோ ரயில்
திட்டம். மோனோ என்றால், ஒன்று அல்லது ஒற்றை என பொருள். இதன் படி, நவீன
முறையில் வடிவமைக்கப்படும் ரயில், ஒற்றை தண்டவாளத்தில் செல்லும். இந்த
பாதையில் இயக்கப்படும் ரயிலில், அதிகபட்சம் நான்கைந்து பெட்டிகள் தான்
இணைக்க முடியும். இதற்காக, தரை மட்டத்திலிருந்து, குறிப்பிட்ட உயரத்தில்
பாலம் கட்டப்படும். அந்த பாலத்தில், மோனோ ரயில் இயக்கப்படும். ஒரு ரயிலில்
அதிகபட்சம், 200 - 300 பேர் வரை மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால்,
மெட்ரோ ரயிலில், குறைந்தபட்சம், 2,000 பேர் வரை பயணிக்கலாம்.
டெண்டரில் விடிவு வருமா?
* கடந்த, 2006ல் தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, சென்னையில் மோனோ ரயில்
திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. பின், தி.மு.க., ஆட்சிக்கு வரவே, மெட்ரோ ரயில் திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது. 2011ல் மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், 'சென்னையில், மோனோ ரயில் சேவை துவக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
* முதலில் நான்கு வழித்தடங்களில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, பின் மூன்று வழித்தடங்களில் மட்டும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
* அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், சென்னையில், மோனோ ரயில் சேவை, இரண்டு கட்டங்களாக, 111 கி.மீ., தூர அளவில், அமைக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக, வண்டலூர் - வேளச்சேரி, பூந்தமல்லி - கத்திப்பாரா, பூந்தமல்லி - வடபழனி இடையே, மூன்று வழித்தடங்களில், 8,500 கோடி ரூபாய் செலவில், 57 கி.மீ., தூரம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
* இரண்டு முறை டெண்டர் கோரப்பட்டு, சிக்கல்கள் ஏற்படவே, அவை ரத்து செய்யப்பட்டன. பின், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, குழு உறுப்பினர்கள் டெண்டர் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்து வந்தனர்.
* இத்திட்டத்திற்கு, நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டிலும், 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை அடுத்து,
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை தெரிவித்தது.
* மத்திய அரசின் அனுமதி கேட்டு, தமிழக அரசு பல முறை கோரிக்கை வைத்து வந்தது. மோனோ ரயில் திட்டத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், முடங்கி கிடக்கும் டெண்டர் பணி விறுவிறுப்பாக வாய்ப்புள்ளது.
Comments