யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
தினமலர் செய்தி : மின் வாரியத்தில் உள்ள குளறுபடிகளால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யாமல்,
மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிப்பது சரிதானா என, கேள்வி எழுப்பி உள்ள
ஓய்வுபெற்ற மின் வாரிய மூத்த அதிகாரிகள், மின் வாரிய செயல்பாடுகள்
குறித்தும், கணக்குகள் குறித்தும் சில கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
*மின் வாரியத்தின் 2014 - 15க்கான கட்டண உயர்வுக்கான தேவை குறித்து, 2013 நவம்பர் 30ம் தேதிக்குள், ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தகவல் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக மின் வாரியம் இந்த தேவையை, ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஒழுங்குமுறை ஆணையம், தன்னிச்சையாக கட்டண உயர்வை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இப்படி முடிவு எடுக்கும் அதிகாரம் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு இருந்தாலும், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, பரிந்துரைக்கலாமே தவிர, கட்டண உயர்வையே நிர்ணயிக்க முடியாது. அப்படி இருக்கையில், 30 சதவீத கட்டண உயர்வை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துஉள்ளது தவறு ஆகாதா?
*மின் வாரியத்தின் நிதி மற்றும் எரிசக்தி இயக்குனர்களாக இருந்தவர்கள், ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக தற்போது உள்ளனர். இவர்கள் மின் வாரியத்தில் இருந்த போது தான் 2014 - 15க்கான தேவை குறித்து, ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கோரிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சென்றதும் கட்டண உயர்வை நிர்ணயிக்க முற்பட்டு இருக்கும் மர்மம் என்ன?
*மேட்டூர், வட சென்னை, வல்லுார், தூத்துக்குடி மின் உற்பத்தி நிலையங்களில், ஆண்டுக்கணக்கில் உற்பத்தி தாமதமாகிறது. 39 மாதத்தில் முடிக்கப்பட வேண்டிய பணிகள், 65 மாதங்களாகியும் இழுத்தபடி இருக்கின்றன. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
*மின் உற்பத்தி திட்டங்கள் தாமதம் எனக் கூறி, தனியாரிடம் மின்சாரத்தை வாங்கவே, இந்த தாமதம் திட்டமிட்டு நடந்துள்ளதா?
சரியான விலை எது?
*தேசிய எரிசக்தி கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள், மின்சாரத்தை வெளியில் இருந்து கொள்முதல் செய்யும்போது, அதன் விலை யூனிட்டுக்கு 2.50 முதல் 3.50 ரூபாய் தான். ஆனால், தமிழக மின் வாரியம், 5.50 ரூபாய்க்கு மின் கொள்முதல் செய்வதன் பின்னணி என்ன? இதனால், மின் வாரியத்திற்கு கடந்த காலத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. இது யாருடைய லாபத்திற்காக?
*அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்குவதே மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு காரணம். இந்த கடன், கடந்த ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை கொண்டு 10 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை ஏற்படுத்தி இருக்கலாம்.
*ஒரு யூனிட் மின்சாரம், ஆந்திராவில் - 3.50 ரூபாய்க்கும், தேசிய எரிசக்தி கழகத்தில் - 2.50 ரூபாய்க்கும், என்.எல்.சி.,யில் - 3.50 ரூபாய்க்கும், மகாராஷ்டிராவில் - 3.14 ரூபாய்க்கும், மத்திய பிரதேசத்தில் - 3.15 ரூபாய்க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக மின் வாரியம் கூட, கடந்த ஆண்டு, 3.23 ரூபாய்க்கு உற்பத்தி செய்தது. ஆனால், நடப்பாண்டில், தமிழக மின் வாரியம், உற்பத்தி செலவை 4.50 ரூபாய் என, கணக்கு காட்டுகிறது. இதனால், உற்பத்தி செலவுக்காக, மின் வாரியத்துக்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி செலவை இப்படி அதிகரித்து காட்டுவதற்கு என்ன காரணம்?
*தூத்துக்குடி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 718 கோடி யூனிட் மின்சாரத்துக்கு, யூனிட் 3.83 ரூபாய் வீதம், 2,752 கோடி ரூபாய் செலவாகும். ஆனால், யூனிட்டுக்கு 5.50 ரூபாய் என, கணக்கிடப்பட்டு உள்ளதால், மின் வாரியத்துக்கு 1,200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
*மின் வாரியம், கடந்த ஆண்டு, 2,526 கோடி யூனிட் மின்சாரத்தை, யூனிட் 3.23 ரூபாய் வீதம், 8,154 கோடிக்கு உற்பத்தி செய்துள்ளது. நடப்பாண்டு உற்பத்திக்கு 4,000 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், வெளியில் இருந்து வாங்கப்படும் மின்சாரம் குறைந்திருக்க வேண்டும். ஆனால், வெளியில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்துக்கு ஒதுக்கப்பட்ட 17,946 கோடி ரூபாயை குறைக்காமல் வைத்திருப்பது ஏன்?
*மின்சாரம் வாங்கி விற்கும் சந்தைக்கான பரிமாற்ற எண் - 1 இ.எக்ஸ்., என்ற குறியீட்டில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 2.88 ரூபாய். 'பிக்சில்' என்ற குறியீட்டில் ஒரு யூனிட்டின் விலை 2.59 ரூபாய். மின் வியாபாரிகள் கூட, யூனிட் விலையை 4.29 ரூபாய் என்று தான் நிர்ணயித்து உள்ளனர். ஆனால், மின் வாரியம், 5.50 முதல் 14 ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்தது ஏன்?
*வெளி கொள்முதலுக்கு, ஆணையம் விலை நிர்ணயிக்கிறது. இந்த விலையை விட, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்க, ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும். 2013 - 14ம் ஆண்டுக்கு, மின் கொள்முதலுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை 14 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், மின் வாரியம் 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது. இதற்கு ஆணையம் அனுமதி அளித்ததா? அப்படியானால், கூடுதல் விலையால் ஏற்படும் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?
நிலக்கரியில் மர்மம்!
*நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, இறக்குமதி நடக்கிறது. தேசிய எரிசக்தி கழகம் உள்ளிட்ட மின் உற்பத்தியாளர்கள், ஒரு டன் நிலக்கரியை 70 டாலருக்கு (4,300 ரூபாய்) வாங்குகின்றனர். ஆனால், தமிழக மின் வாரியம், 85 முதல் 90 டாலருக்கு (5,200 - 5,500 ரூபாய்) ஒரு டன் நிலக்கரியை வாங்குகிறது. இப்படி, கூடுதல் விலையை நிலக்கரி இறக்குமதிக்கு அளிப்பது ஏன்?
*1,000 ரூபாய்க்கு நிலக்கரி வாங்கினால், அதை உற்பத்தி இடத்துக்கு கொண்டு வரும் போது, மின் வாரியத்திற்கு 1,500 ரூபாய் ஆகிறது. நிலக்கரியை கொண்டு வர 20 ஆண்டுகளாக ஒருவரே ஒப்பந்ததாரராக உள்ளார். டெண்டர் அடிப்படையில், நிலக்கரியை கொண்டு வர ஒப்பந்ததாரரை நியமித்தால், கொண்டு வரும் செலவு குறையும். இதை ஏன் இதுவரை செய்யவில்லை?
*சர்க்கரை ஆலைகள், மின் வாரியத்துக்கு விற்ற மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 3.01 முதல் 3.50 ரூபாய். ஆனால், சர்க்கரை ஆலைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் ஒருவருக்கு அளித்து, அவர் மூலம் கொள்முதல் செய்வதால், யூனிட் விலை 5.50 ரூபாய். சர்க்கரை ஆலைகளிடம் இருந்து 82 கோடி யூனிட் மின்சாரத்தை இப்படி கொள்முதல் செய்ததில், அரசுக்கு நஷ்டம் 200 கோடி ரூபாய். இதற்கு நடவடிக்கை என்ன?
*மின் வாரியத்துக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீதம் கமிஷன் அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், மூலதன செலவுக்கு ஒதுக்கப்பட்ட 4,500 கோடி ரூபாயில், 900 கோடி கமிஷனாக கொடுக்கப்பட்டு உள்ளது. இது யாருக்கு செல்கிறது?தேவையில்லாத ஒதுக்கீடுகள்?
*ஆயுள் முடிந்துவிட்ட எண்ணுார் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்த மதிப்பே 100 கோடியைத் தாண்டாது. ஆனால், இந்த நிலையத்திற்கு நிரந்தர வைப்பு என, 299 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. எதற்காக இந்த ஒதுக்கீடு?
*எண்ணுார் விரிவாக்க திட்டத்திற்கு நடப்பாண்டு நிலைக் கட்டணமாக 461 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 4,600 கோடி ரூபாய் செலவிடப்படும் போது தான், 461 கோடி ரூபாய் நிலைக் கட்டணமாக ஒதுக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு டெண்டர் கூட இதுவரை விடப்படவில்லை. நடப்பாண்டில் இன்னும் இரு மாதங்கள் தான் மீதம் உள்ளன. இந்த நிலையில், இந்த ஒதுக்கீடு எதற்கு?
*இதே போல், அனைத்து மின் நிலையங்களுக்கும் நிலைக் கட்டணமாக 4,333 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அனைத்து மின் நிலையங்களுக்கும் சேர்த்து, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஆகாத நிலையில், இவ்வளவு ஒதுக்க காரணம் என்ன?
தவறான கணக்கு:
*தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் தேவை அதிகரிப்பு குறித்து, தவறாக கணக்கிடப்பட்டு உள்ளது. 2014 - 25க்கு தொழிற்சாலைகளுக்கு - 2 சதவீதம், வீடுகளுக்கு - 16 சதவீதம் மின் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு, வீடுகளின் மின் தேவை 0.99 சதவீதம் தான் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், இந்த கணக்கீடு, தவறான வருவாய் விகிதத்தை வெளிப்படுத்தும்.
*2014 - 15ம் ஆண்டுக்கான மின் வாரியத்தின் மொத்த வருமான தேவை 39,818 கோடி ரூபாய் என, ஆணையம் நிர்ணயித்து உள்ளது. தமிழக மின் வாரியம், தன் தேவை குறித்து, ஆணையத்துக்கு மனுவே கொடுக்காத நிலையில், வருமான தேவையை, ஆணையமே நிர்ணயித்தது எப்படி?
*மின் வாரியத்துக்கு, கட்டணம் அல்லாத வருவாய் கடந்த ஆண்டு 1,800 கோடி ரூபாய். ஆனால், நடப்பாண்டில் அந்த வருமானத்தை 726 கோடி ரூபாய் என, ஆணையம் நிர்ணயித்து உள்ளது. இதனால், வாரியத்துக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
மின் கட்டண உயர்வை ஏற்கிறீர்களா... இல்லையா...' : கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறிய அதிகாரிகள்
மின் கட்டண உயர்வு கருத்து கேட்பு கூட்டங்களில், பொது மக்கள் கேட்ட, பல கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல், மின் வாரியம் மற்றும் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் திணறினர்.
தமிழ்நாடு மின் வாரியம், அரசியல் மற்றும் அதிகாரிகளின், நிர்வாக சீர்கேடுகளால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.இதை சரிசெய்ய, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தற்போது, மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.சென்னை, நெல்லை, ஈரோட்டில், மின் கட்டணம் உயர்வு தொடர்பாக, பொது மக்கள், கருத்து கேட்பு கூட்டங்கள் நடந்தன.இதில், மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மின் வாரிய இயக்குனர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:
*மின் கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் குறித்து, மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்திடம், மனு கொடுக்கவில்லை. ஆனால், ஆணையமே, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தற்போது, கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதை மின் வாரியம் ஏற்கிறதா, இல்லையா?
*மின் கட்டணத்தை உயர்த்த முன்வந்த ஆணையம், மின் வாரிய முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யாதது ஏன்?
*பல மணி நேரம் மின் தடை செய்யப்படும் நிலையில், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன?
*தொழில் வளர்ச்சி பாதிக்கும் என்பதால், மின் கட்டணத்தை, 20 சதவீதம் மேல் உயர்த்த கூடாது என, விதி உள்ளது. ஆனால், அதற்கு மேல், ஏன் கட்டணம் உயர்த்தப்படுகிறது?
*இந்தியாவில், தொழில் வளர்ச்சியில், தமிழகம் பின் தங்கியுள்ளது. இந்த நேரத்தில், மின் கட்டணம் உயர்த்த வேண்டுமா?
*இரண்டு ஆண்டுகளாக, மின் கட்டண உயர்வு மனுவை அளிக்காத, மின் வாரியம் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
*முறைகேடுகளில் ஈடுபடும், மின் வாரிய அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
இது போன்ற கேள்விகளை, மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டனர். ஆனால், அந்த கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
இதுகுறித்து, கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:மின் வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்திடம், மனு அளித்து, மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தமிழக அரசு மீது புகார் கூறப்படும். எனவே, மின் கட்டணமும் உயர்த்தப்பட வேண்டும்; ஆனால், தமிழக அரசு மற்றும் மின் வாரியம் மீது, அந்த பழி விழுந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போது, கட்டணத்தை உயர்த்திய பின், ஒழுங்குமுறை ஆணையம் மீது, பழிபோட்டு, தப்பித்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments