பறவை காய்ச்சலால் ரூ.5,000 கோடி 'அவுட்?': சுற்றுலா முடங்குவதால் கேரளா அலறல்

தினமலர் செய்தி : மூணாறு: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால், சுற்றுலா தொழிலில், 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆலப்புழா, குமரகம், கோவளம், வர்க்கலா, வயநாடு, திருச்சூர், தேக்கடி, மூணாறு ஆகிய பகுதிகள், கேரளாவில் முக்கிய சுற்றுலா தலங்கள்.
இந்த இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள், அதிகளவில் வந்து செல்வர். குறிப்பாக, இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், கேரளா சுற்றுலா செல்ல தவற மாட்டர்.


ரூ.5,560 கோடி:

கடந்தாண்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் மட்டும், 5,560 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்தாண்டு, வருமானம் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, வரும் டிச., 15ம் தேதி முதல் ஜன., 15ம் தேதி வரை, ஓட்டல்களில் அறை முன்பதிவு செய்துள்ளோரில், 90 சதவீதம் பேர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில், பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இத்தகவல், வெளிநாட்டவருக்கும் தெரிய வந்துள்ளதால், சுற்றுலா அமைப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு, விவரம் கேட்கின்றனர். முன்பதிவு செய்ததை ரத்து செய்ய வாய்ப்புள்ளதால், கேரள அரசும், தனியார் சுற்றுலா தொழில் துறையினரும் அலறுகின்றனர்.

3 லட்சம் பறவைகள்:

இதற்கிடையில், பறவை காய்ச்சல் வைரஸ் தாக்கிய பறவைகளை, 3 நாட்களுக்குள் அழிக்க கேரள அரசு, முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் வி.எஸ்.சிவக்குமார் கூறியதாவது: பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரையில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், குறிப்பாக, வாத்துகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும், பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், 14 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு கூட அந்த பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பறவைகள் அதிகளவில் கொல்லப்பட்டதையடுத்து, விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதையடுத்து, நிவாரணம் அளிக்கும் விதமாக, அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பறவை காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில், 3 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments