2ஜி: கைது அபாயத்தில் சிக்கி தப்பிய கனிமொழி- வக்கீல் மன்னிப்பு கேட்டதால் பிடிவாரண்ட் ரத்து!

2ஜி: கைது அபாயத்தில் சிக்கி தப்பிய கனிமொழி- வக்கீல் மன்னிப்பு கேட்டதால் பிடிவாரண்ட் ரத்து! OneIndia News : டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்து பின்னர் ரத்து செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதால் கைது நடவடிக்கையில் இருந்து கனிமொழி தப்பினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இன்றைய விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆ.ராசா உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். ஆனால் கனிமொழி ஆஜராகவில்லை.

இது குறித்து நீதிபதி சைனி கூறுகையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று இறுதி வாதம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், கனிமொழியும் நீதிமன்றத்துக்கு வரவில்லை அவரது வழக்கறிஞரும் வரவில்லை. நேரம், 11.30 மணி ஆகிவிட்டது. கனிமொழி ஆஜராகாததையடுத்து அவருக்கு இந்த நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கிறது என்றார்.

பின்னர் 12.25 மணிக்கு கனிமொழியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார். இதனையடுத்து கனிமொழிக்கு பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு 1 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மேலும், கனிமொழியின் வழக்கறிஞரை நீதிபதி சைனி கடுமையாக எச்சரித்தார். எதிர்காலத்தில் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தினார். முன்னதாக இன்று காலை, ஆவணங்களைப் படித்து பார்க்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டதையடுத் ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதி வாதத்தை டிசம்பர் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments