2. 5 வயதில் அப்பாவை பார்த்த மகன் ; தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மகிழ்ச்சி

தினமலர் செய்தி : ராமேஸ்வரம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் மரணத்தண்டனை பெற்ற தமிழக மீனவர்களின் மரணத்தண்டனையை இலங்கை அரசு ரத்து செய்ததை அடுத்து 5 மீனவர்கள் நேற்று தாயகம் திரும்பினர். நேற்று இரவில் டில்லியில் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு தமிழகம் திரும்பினர்.
இன்று காலையில் சென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பின்னர் இவர்கள் சொந்த கிராமமான தங்கச்சிமடத்திற்கு புறப்பட்டு சென்றனர். மதியம் 12.10 மணியளவில் இங்கு வந்து சேர்ந்தனர் . மீனவர்கள் மலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் விடுதலை விழாவாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டது. 

சிறைத்தண்டனையில் இருந்து தப்பிய மீனவர்கள் வில்சன், எமர்சன், லாங்லெட், அகஸ்டஸ் , பிரசாத் ஆகியோர் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவ கிராமங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அரசியல் கட்சியினர் எடுத்த முயற்சியால் மத்திய அரசு உரிய நடவடிக்கையில் இறங்கியது. அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
தங்கச்சி மடத்தில் மீனவர்களை வரவேற்க மேள, தாளத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே ஆட்டமும், பாட்டமுமாக உள்ளது. வண்ண தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பட்டாசுகள் வெடித்த விதமாக மீனவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்.
மீனவ குடும்பத்தை சேர்ந்த தாமஸ் என்பவர் கூறுகையில் கடந்த 2011 முதல் எங்களின் உறவினர்களை பார்க்க முடியாமல் தவித்து கொண்டிருந்தோம். இன்று அவர்கள் ஊர் திரும்புகின்றனர் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மனைவி ஆனந்த கண்ணீர்: விடுதலையாகி வரும் மீனவர் பிரசாத் மனைவி ஸ்கெமித்தா ( 25 ), நிருபர்களிடம் பேசுகையில்; இந்த விடுதலை எங்களுக்கு மறக்க முடியாத நாள். வரும் 2015 புத்தாண்டு இன்றே எங்களுக்கு பிறந்துள்ளது. எனது மகன் தேஏஸ் ( இரண்டரை வயது) பிறந்த நாள் முதல் இன்றுதான் தனது அப்பாவை முதலில் பார்க்கிறான். இதனை நினைக்கும் போது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார். 

Comments