சி.பி.ஐக்கு மாற்றம்
முதலில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வந்த வழக்கு விசாரணை,
2011ல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, நீதிபதி
ஓ.பி.ஷைனி, நவம்பர், 2011ல், 17 பேர் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கத் துவங்கினார். இதுவரை நடந்துள்ள
விசாரணையில், 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 35 ஆயிரம் பக்கங்களுக்கு
ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளன.
ரூ.30,984 கோடி
மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில், '2ஜி
ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டால் அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்
பத்திரிகையில், 30,984 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
வழக்குப் பதிவு
குற்றம்சாட்டப்பட்டோர் மீது, குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்கள்
தயாரித்தல், அரசு பதவியை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட
பல்வேறுபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டனை என்ன?
இந்த வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம், ஆறு
மாதத்திலிருந்து, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக
சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். 2 ஜி வழக்கு தொடங்கப்பட்ட மூன்று
ஆண்டுகளிலேயே, வழக்கு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அரசியல் மற்றும்
தொழில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Comments