பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை எட்டியது :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தினமலர் செய்தி : கூடலுார் : பெரியாறு அணை நீர் மட்டம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 142 அடியை எட்டியது. அணைப்பகுதியில் முகாமிட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் கடந்த மே 7ல் தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ஜூலை 17ல் அணையை ஆய்வு செய்த எல்.ஏ.வி.நாதன் தலைமையிலான மூவர் குழுவினர், அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் வகையில் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களையும் இறக்கி நடவடிக்கை எடுத்தனர்.ஷட்டர்களை இறக்கிய போதிலும், நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டம் உயருவதில் சிக்கல் ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிலைநிறுத்தும் வகையில் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்பதில் தமிழக விவசாயிகளும், பொதுப்பணித்துறையினரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில தினங்களுக்கு முன், கன மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 140 அடிவரை வேகமாக உயர்ந்தது.அதன்பின், அவ்வப்போது பெய்த மழையால் நீர்மட்டம் உயருவதில் தாமதம் ஏற்பட்டது. நீர்மட்டம் எப்போது 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 141.75 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 772 கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு 147 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. நேற்று மாலை 3 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141.85 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் 142 அடியை எட்ட இன்னும் 0.15 அடி தேவைப்பட்ட நிலையில் தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 147 கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறையினர் நேற்று பகல் முழுவதும் நிறுத்தினர். அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்தனர். நேற்று இரவு 7 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141.90 அடியானது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால், அணைக்கு ஏற்பட்ட நீர் வரத்தால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

அணையில் அதிகாரிகள் முகாம்: அணையில் கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ், செயற் பொறியாளர் மாதவன், உதவி செயற் பொறியாளர் சவுந்திரம் மற்றும் பொறியாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், ஊழியர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் அணைப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை அணையின் நீர் மட்டத்தை பரிசோதித்தனர். மேலும் நீர் மட்டம் 142 அடியை எட்டுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேரள அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.எனவே அவர்களுக்கு நேற்று மாலை 6 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியவுடன் அணைப்பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட'சைரன் ஆரன்' அடிக்கப்பட்டது. நீர் மட்டம் 142 அடிக்கு மேல் உயரும் பட்சத்தில் அந்த தண்ணீரை அணையை ஒட்டியுள்ள ஷட்டர் வழியாகவும், தேக்கடி ஷட்டர் மூலம் தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலேசனை நடத்தி
வருகின்றனர்.பெரியாறு அணையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 142 அடியை எட்டியவுடன் அணைப்பகுதியில் முகாமிட்டிருந்த தமிழக பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதை தொடர்ந்து இன்று (நவ.21) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். மதுரை, தேனி பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களிலும் கொண்டாடினர்.அணையில் தேனி கலெக்டர்: பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவதற்காக தேனி கலெக்டர் பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு பெரியாறு அணைக்கு சென்றார். அணையில் முகாமிட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டார்.

Comments