கூட்டணிக்கு அச்சாரமிட்டால் மகிழ்ச்சி: மண விழாவில் கருணாநிதி

''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமணம், தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் ஆக அமைந்தால் மகிழ்ச்சியே,'' என, தி.மு.க., தலைவர் கருணா நிதி தெரிவித்தார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மகள் வயிற்றுப் பேரன் ப்ரித்தீவன்; பேத்தியும், அன்புமணி மகளுமான சம்யுக்தா ஆகியோர் திருமணம், மாமல்லபுரத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.இதில் துணைவி ராசாத்திஉடன் பங்கேற்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
என்னை, முன்னாள் முதல்வர் என்று கூறிய மணமக்கள், என்னை, தாத்தா என்று கூறியிருந்தால், மிக பெருமை அடைந்திருப் பேன். எனக்கு உடல் நலக் குறைபாடு இருந்தாலும், விழாவிற்கு வந்துள்ளேன். எனக்கும், ராமதாசிற்கும், பல்லாண்டுகள் நெருங்கிய பழக்கம் உண்டு. கோபதாபம், தடங்கல் ஏற்பட்டாலும், எனக்கு அவர் மீதும், அவருக்கு என் மீது உள்ள பற்றுதல் என்றைக்கும் குறைந்தது இல்லை.நேற்று ஸ்டாலினும், இன்று நானும் மணமக்களை வாழ்த்தி உள்ளோம். திருமணத்திற்கு ராமதாஸ் அழைத்தபோது, என் பேரன், பேத்தி திருமணம் என்று உரிமையோடு கூறி, பாட்டாளி சொந்தங்களையும் சந்திக்கும் வாய்ப்பை அளித்த கெழுதகை நண்பர், சகோதரர் ராமதாசிற்கு நன்றி.இவ்வாறு, அவர் பேசினார்.

பின்னர் ராமதாஸ் நன்றி கூறி பேசியதாவது:எனக்கும், கருணாநிதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு; அவருக்கும் பெரிய குடும்பம், எனக்கும் பெரிய குடும்பம். 92 வயது மூத்த அறிஞர் வாழ்த்தியது, சிறப்பிலும் சிறப்பு. கொள்ளு பேரன், பேத்தி பேறு, எங்களுக்கு கிடைத்து உள்ளது.எனக்கும், கருணாநிதிக்கும் இடையில் இருப்பது வெறும் பழக்கம் மட்டுமல்ல; ஆழமான நட்பு. 1989ம் ஆண்டு, இட ஒதுக்கீட்டிற்காக, அவரை சந்தித்ததிலிருந்து, இன்று வரை அந்த நட்பு தொடர்கிறது. நான் எதிரணியில் இருந்தபோது, கைதாகி சிறையில் இருந்த அவரை சந்தித்து, ஆறுதல் கூறினேன்.ஒரே அணி என்றாலும், கருத்தோ, ஆலோசனையோ கூற தவறுவதில்லை. என்னை கண்டதும், 'தைலாபுரம் தைலம் வருகிறது' என்பார். நான் மனதில் பட்டதை, பட்டென்று கூறுவேன். அவரோ, யோசித்து, நயமாக, இருபொருள் பட கூறுவார். இப்படி நயமாக பேசுவதில், அவரை மிஞ்ச ஆள் இல்லை. அதுமட்டுமல்ல; உழைப்பு, நேர நிர்வாகம், கட்சி நடத்தும் பாங்கு என, அவரிடமிருந்து, நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.அதன் பின், நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ''இத்திருமணம் மூலம், தேர்தல் கூட்டணி அமைந்தால் சந்தோஷமே,'' என்றார்.

ம.தி.மு.க.,வுக்கு வரவேற்பு;'ம.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்' என்றும், 'பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பது பற்றி, செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்' என்றும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று பகிரங்கமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி யில் அவர்இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண விழாவில்... பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேரன், பேத்தி திருமண விழா, மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க, கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதி புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக, கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி, நிருபர்களை சந்தித்தார். 'வைகோ, ஸ்டாலின் சந்திப்பு புதிய கூட்டணிக்கு துவக்கமாக இருந்தால், அதற்காக மகிழ்ச்சி அடைவேன்' என்றும், 'ராமதாஸ் வீட்டின் திருமண விழாவில் புதிய கூட்டணி உருவானால், அந்த அணி பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுத்தால், மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்' என்றும் கூறினார்.பா.ம.க., கூட்டணியை கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என, சூசகமாக கருணாநிதி தெரிவித்துஉள்ளதால், பா.ம.க.,வை, இன்னமும் காத்திருப்போர் பட்டியலில் தான் கருணாநிதி வைத்து உள்ளார் என்று விமர்சிக்கின்றனர்.

இதையெல்லாம் வைத்து கருணா நிதியின் திட்டம் குறித்து, அறிவாலய வட்டாரத்தில் கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு எதிராக, வரும் சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க கருணாநிதி வியூகம் வகுத்து செயல்படுகிறார். கூட்டணியில், ம.தி.மு.க.,வோடு, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க.,வையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என, விரும்புகிறார்.

ஆனால், பா.ம.க., - தே.தி.மு.க., இடையே இன்னமும் இணக்கமான சூழல் உருவாகவில்லை. இதனால், புதிதாக அமைக்கும் கூட்டணியில், தே.மு.தி.க.,வை முதலில் கொண்டு வந்த பின், அக்கட்சியிடம் பேசி, பா.ம.க.,வை கூட்டணியில் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அதன்பின், பா.ம.க.,வை கூட்டணியில் கடைசியாக சேர்த்துக் கொள்ள விரும்புகிறார்.

விரைவில் மெகா கூட்டணி: இதை, அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. அதற்கேற்றபடி தான், ராமதாஸ் இல்லத் திருமணத்தில் நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன. எல்லா தலைவர்களும் இதை ஏற்றுக் கொள்வது போலவே, திருமண நிகழ்ச்சியிலும், கருத்து தெரிவித்திருக்கின்றனர்.அதனால், தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் விரைவில் மெகா கூட்டணி அமையும்.அதில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., கட்சிகளோடு, பா.ஜ., காங்., கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றை இணைக்கவும் திட்டம் உள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Comments