சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.
அவருக்கு வயது 86.
ஸ்ரீ ஆண்டாள், பராசக்தி, பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், எஸ்.எஸ்.ராஜேந்தின் நடித்துள்ளார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என,
திரையுலகில் பரபரப்பாக இருந்து வந்தார். பின், குணசித்திர வேடங்களிலும்
நடித்து வந்தவர், சிலம்பரசனுடன், தம் படத்தில் நடித்த பின், நடிப்பதையும்
தவிர்த்துவிட்டார். பட விழாக்கள், முக்கிய விழாக்களில் மட்டும் கலந்து
கொண்டார். கடந்த ஓராண்டாக, விழாக்களில் கலந்து கொள்வதையும் தவிர்த்து
விட்டார். ஸ்ரீ ஆண்டாள், பராசக்தி, பூம்புகார், சிவகங்கை சீமை, தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில், எஸ்.எஸ்.ராஜேந்தின் நடித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு, இரண்டு தினங்களுக்கு முன், மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே, ஆழ்வார்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சு திணறல் அதிகமானதால், நேற்று, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(அக்., 24ம் தேதி) காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்:
1928-ம் ஆண்டு மதுரையை அடுத்த சேடப்பட்டியில், சேடப்பட்டி சூர்யநாராயண
தேவர் ராஜேந்திரனாக பிறந்தவர் எஸ்.எஸ்.ஆர். நடிப்பின் மீது ஆசை கொண்டு
சினிமாவுக்கு வந்தார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்திலேயே தானும்
அறிமுகமானார். தொடர்ந்து மனோகரா, ரத்தக்கண்ணீர், குல தெய்வம், முதலாளி,
தைபிறந்தால் வழிபிறக்கும், சிவகங்கை சீமை, ராஜா தேசிங்கு, குமுதம், முத்து
மண்டாம், ஆலய மணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார், மணி மகுடம்,
தெய்வப்பிறவி, ஆலயமணி, சாரதா உட்பட, 100க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்தார். சிவாஜியுடன் ஏராளமான படங்களில் நடித்தவர் பின்னர் குணச்சித்திர
நடிகராகவும் மாறினார். நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும்,
தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் எஸ்.எஸ்.ஆர்., கடைசியாக சிம்பு நடித்த தம்
படத்தில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.
அவ்வப்போது சினிமா விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார்.
லட்சிய நடிகர் பட்டம்:
பெரியார்
மற்றும் அண்ணாதுரையின் சுயமரியாதை கொள்கைகளில் தீவிர பற்று கொண்டவர்.
மேலும் தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய
நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,-ஆன முதல் இந்திய நடிகர்:
நடிகராக மட்டுமல்லாது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார்
எஸ்.எஸ்.ராஜேந்திரன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அரசியல் ஈடுபாட்டை
பார்த்து எஸ்.எஸ்.ஆரும் அரசியலுக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் திமுக., வில்
இருந்த ராஜேந்திரன், 1962-ம் ஆண்டு, திமுக., சார்பில் தேனி சட்டசபை
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவில் எம்.எல்.ஏ.ஆன முதல்
இந்திய நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. தொடர்ந்து திமுக
சார்பில் எம்.பி.யாகவும் இருந்தவர், பின்னர் திமுகவில் இருந்து விலகி,
அதிமுக., கட்சியில் இணைந்தார். 1981-ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில்
போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.
உடல் அஞ்சலிக்காக வைப்பு:
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி,
தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜேந்திர குமார்,
கலைவாணன், செல்வராஜ், ரவிக்குமார், கண்ணன் என்ற மகன்களும், பாக்யலட்சுமி
என்ற மகளும் உள்ளனர். எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல், சென்னை தேனாம்பேட்டை,
எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவரது
மறைவு செய்தியை கேட்டு ஏராளமான திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல்
தெரிவித்துள்ளனர். இன்று மாலை, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு
நடந்தது.
சச்சு இரங்கல்:
சொர்க்கவாசல்
படத்தில் தான் முதலில் பார்த்தேன். ராஜாஜி படத்தில் தங்கையாக நடித்தேன்.
மூத்த நடிகர்கள் ஒவ்வொருவாராக இறந்து வருவதாக வருத்தமாக இருக்கிறது. அவரது
நடிப்பில் சோகம் , சிரிப்பு எல்லாமே இருக்கும். யாருக்கும் பயந்தவர்
கிடையாது. அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை, இன்றைக்கு
அவர் நம்மிடம் இல்லாதபோது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவரது
குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என நடிகை
சச்சு கூறியுள்ளார்.
பாக்யராஜ் இரங்கல்:
லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர்.
அவரது நிறைய படங்களை பார்த்துள்ளேன். பெண்கள் மத்தியில் நன் மதிப்பை
பெற்றவர். அவரது படங்கள் மீண்டும் மீண்டும் நம்மை ஞாபகப்படுத்தி கொண்டே
இருக்கும். அவருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என பாக்யராஜ்
கூறியுள்ளார்.
வைரமுத்து இரங்கல்:
சரித்திரத்தின்,
'தங்க தூண்' ஒன்று சாய்ந்துவிட்டது. தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்.,
சிவாஜிக்கு பிறகு எஸ்.எஸ்.ஆர்., தான். லட்சிய நடிகர் என்ற அடைமொழி போற
போக்கில் வந்த பட்டம் அல்ல, பகுத்தறிவு கோட்பாட்டுக்கு உட்பட்டு
வாழ்ந்தவர். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என
கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
அரைநாள் படப்பிடிப்பு ரத்து:
எஸ்.எஸ்.ஆரின் மறைவையொட்டி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் இன்று அரைநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments