யாரையும் ஜெ., சந்திக்கவில்லை ; சிறைத்துறை வட்டார தகவல்

பெங்களூரு: கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெ., இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்வில்லை என சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெ., வை சந்திக்க முயற்சி செய்தனர்.
ஆனால் பொதுவாக சிறைக்கு கைதிகளை பார்க்க யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்ட முறைகள் ஜெ.,விடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யாரையும் சந்திக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். குறிப்பாக பன்னீர்செல்வம் ஒரு முதல்வராக இருந்து கொண்டு என்னை சந்திக்க கூடாது என்பதை அவரிடம் சொல்லி விடுங்கள் என்று கூறினாராம். இதனால் பலரும் பல மணி காத்திருந்ததுதான் மிச்சம்.

இட்லி, பொங்கல், சான்வெஜ்: சிறையில் ஜெ.,வுக்கு 15க்கு 20 என்ற அளவுள்ள அறை வழங்கப்பட்டுள்ளது. ஒரு டி.வி., உள்ளது. ஜெ., எப்போதும் இருக்கும் சவுகரியமான எஸ் டைப் சேர் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு சிறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஜெ., வுக்கு பெரிய அட்டை பெட்டிகளில் இட்லி, பொங்கல், சான்வெஜ், பிரட், என மதியம் காய்கறிகளுடன் சாப்பாடு, பழ வகைகள் அனுப்பி வைக்க அனுமதிக்கப்பட்டது. அளவுக்கு மீறி அதிக பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெ., வுக்கு போக எஞ்சியவை சிறையில் இருக்கும் ஏனைய பெண் கைதிகள் சாப்பிட்டு கொண்டனராம்.

சசிகலாவும், ஜெ.,வும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இளவரசி, சுதாகரன் தனித்தனி சிறையில் உள்ளனர். இளவரசி அவ்வப்போது ஜெ.,வை சந்தித்து பேசிக்கொள்வாரம்.
ஜெ.,வுக்கு உடல் உபாதைகள் அதிகம் இருப்பதால் இவருக்கென நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு டாக்டர்கள் 3 மணி நேரத்திற்கொரு முறை செக்கப் செய்கின்றனர்.
ஜெயிலில் 4 நாள் இரவு : கடந்த சனிக்கிழமை முதல் ஜெ., 4 நாள் இரவு ஜெயிலில் இருந்துள்ளார். இன்று ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை, வரும் 7ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்த சில நாட்களுக்கு சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Comments