ஜெ., நாளையே விடுதலையாவார் ; கோர்ட் உத்தரவு நகல் வருவதில் சிக்கல்

பெங்களூரு; சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., நாளையே விடுதலையாகக்கூடும் என கூறப்படுகிறது. ஜெ., விடுதலையாவார் என பரப்பபன அக்ரஹார சிறை அருகே தொண்டர்கள் குவிந்ததால் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சுப்ரீம் கோர்ட் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியுள்ளது, இத்துடன் இவர்கள் மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காலை 11.30 மணியளவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நகல் இன்னும் டில்லியில் முகாமிட்டிருக்கும் அ.தி.மு.க,. வக்கீல்கள் கையில் கிடைக்கவில்லை. இந்த உத்தரவு நகல்கள் முறையே கர்நாடக ஐகோர்ட், வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு கோர்ட், சிறைத்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜெ., தரப்பு வக்கீல்கள் இதனை ஆவணமாக வழங்கி தங்களின் விடுதலைக்கு மனு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் கோர்ட் அளிக்கும் நிபந்தனையுடன் சிறையில் இருந்து ஜெ., வெளியேற முடியும்.

இந்த நகல் இன்று மாலை 5 மணிக்கு சிறைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இது இன்று நடக்குமா என்ற சந்தேகம் எழும்பியது. இதன்படி நகல் கிடைக்கவில்லை. ஒரு வேளை இரவோடு, இரவாக இந்த நகல் கிடைத்தவுடன் நாளை முறைப்படி தாக்கல் செய்து ஜெ., விடுதலையாவார். எனவே நாளை சனிக்கிழமை மதியம் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்.

சிறை அருகே 144 தடை உத்தரவு : ஜெ.,வை வரவேற்க பெங்களூருசிறை அருகே தொண்டர்கள் கூடி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1கி.மீட்டர் தொலைவில் தான் யாரும் நிற்க முடியும்.

தனி ஹெலிகாப்டர் தயார்: இதற்கிடையில், ஜெ.,வை வரவழைக்க தனி ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. ஏற்கனவே கடந்த 27ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்கென வந்த தனி ஹெலிகாப்டர் இன்னும் சிறை வளாகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரு புறப்பட்டு சென்றதாக சென்னை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

குவிக்கப்பட்ட போலீஸ் திரும்பியது : சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து ஜெ., இன்று விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு சிறை சுற்றிலும் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆனால் கோர்ட் நடைமுறைகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பினர். இதனால் ஜெ., விடுதலை இன்று இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியானது.

Comments