ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் மைல்கல் - சாதித்தனர் இந்திய விஞ்ஞானிகள் : வெற்றிகரமாக பாய்ந்தது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,சி
சென்னை : கடல்சார் ஆராய்ச்சிக்கு உதவும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி
செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு
மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்
நுட்பத்திற்காக செலுத்தப்படும், மூன்றாவது செயற்கைக்கோள் இது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சாலை போக்குவரத்து, கடல்வழிப் பாதை
போன்றவற்றை கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மையில் பெரிதும் பயன்படும்,
'குளோபல் பொசிசனிங் சிஸ்டம்' எனப்படும் ஜி.பி.எஸ்., சேவைக்காக,
செயற்கைக்கோள்களை ஏவும் பணியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான,
'இஸ்ரோ' விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ஏழு செயற்கைக்கோள்களை
விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1ஏ மற்றும்
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1பி செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
இந்த
வரிசையில், 1,425 கிலோ எடை கொண்ட, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி
செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை,
1:32 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு
மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்
செலுத்தப்பட்ட, 20வது நிமிடத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள்,
பூமியின் துருவ சுற்று வட்டப் பாதையில், பூமிக்கு அருகில், 282
கிலோமீட்டர் அருகிலும், பூமியில் இருந்து தொலைவில், 20,670 கி.மீ.,
தூரத்திலும் நிலைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10
ஆண்டுகள்; கர்நாடகாவில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை
அனுப்பும்.
இந் நிகழ்ச்சியை பார்வையிட்ட மத்திய அறிவியல்
மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா நிருபர்களிடம்
கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 27வது முறையாக வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டுள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள்
தொழில்நுட்பத்தின் மூலம் நாம், சொந்த ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை
பெற்றுள்ளோம். அடுத்து, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1டி செயற்கைக்கோள் டிசம்பரில்
விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
'இஸ்ரோ'
தலைவர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது: பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மீண்டும்
சாதனை படைத்துள்ளது. தற்போது அனுப்பப்பட்ட ராக்கெட், 60 நாட்களுக்குள்
ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த, நான்கு நாட்களில், ராக்கெட்டை விண்ணில்
செலுத்தும் பணியில், ஆயிரம் பேர் ஈடுபட்டனர். இந்தியாவிற்கு பெருமை
சேர்க்கும் மிகப்பெரிய திட்டமான, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட்,
இன்னும், 45 நாட்களுக்குள் விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்படும். இதேபோல்,
ஜி சாட் 16 செயற்கைக்கோள், பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில்
செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், 48 டிரான்ஸ்பான்டர்களை சுமந்து
செல்ல உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,
செயற்கைக்கோள் : ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள்கள் கடல்சார்
ஆராய்ச்சி மற்றும் தரைவழிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக விண்ணில்
செலுத்தப்படுகின்றன. மொத்தம், ஏழு செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
இந்தியாவிற்கான
சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தைப் பெற இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.
தரை வழி, வான் வழி, கடல் வழி போக்குவரத்துக்கு உதவுவதற்காக இந்திய
நேவிகேஷன் அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால்,
பேரிடர் மீட்புப் பணிகளுக்கும், வரைபட தயாரிப்பு போன்றவற்றுக்கும்
உதவும். வாகன ஓட்டுனர்களுக்கு ஒலி வடிவிலும் தகவல்களை வழங்க முடியும்.
போக்குவரத்துக்கான தகவல்களை வழங்குவதோடு, ராணுவம், விமானப்படை,
கடற்படைக்கும் துல்லியமான தகவல்களை இந்த அமைப்பின் மூலம் வழங்க முடியும்.
இந்தச் செயற்கைக்கோளில் லேசர் அலைக்கற்றை மூலம் தொலைவை துல்லியமாக
கணக்கிட, 'கார்னர் க்யூப் ரெட்ரோ ரிப்ளக்டர்' என்ற கருவியும், சி -பேண்ட்
டிரான்ஸ்பான்டர், 'ருபிடியம்' எனப்படும் அணு கடிகாரம் உள்ளிட்ட கருவிகள்
உள்ளன. இந்தியா தனக்கான சொந்த, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தைப் பெற,
'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வரிசையில், நான்கு செயற்கைக்கோள்களை ஏவினாலே போதும்
என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த எடை: 1,425.4 கிலோ ஆயுள் காலம்: 10
ஆண்டுகள்
சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் தூரம் : பூமியில் இருந்து
குறைந்த பட்ச தூரம் 282.5 கி.மீ., ; அதிகபட்ச தூரம்: 20,670 கி.மீ.,
மின்சாரம்: செயற்கைக்கோளில் உள்ள 2 சோலார் பேனல்கள் மூலம் 1660 வாட்
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
Comments