இன்ச்சான்: ஆசிய விளையாட்டு ஹாக்கி அரையிறுதியில்
இந்திய அணி 1–0 என தென் கொரியாவை வீழ்த்தியது. நாளை நடக்கும் பைனலில்
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
தென் கொரியாவின் இன்ச்சான் நகரில், 17வது ஆசிய விளையாட்டு நடக்கிறது.
இதில், நேற்று நடந்த ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா
மோதின.
ஆட்டம் முழுவதும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. 44வது
நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதற்கு தென்
கொரிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில், இந்திய அணி 1–0
என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறி, குறைந்தபட்சம்
வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தது. தவிர, 12 ஆண்டுகளுக்குப்பின் ஆசிய
விளையாட்டு பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 2002ல் புசனில் (தென் கொரியா)
நடந்த போட்டியில் வெள்ளி வென்றது.
பாகிஸ்தான், மலேசியா அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதியில் 60 நிமிட
முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் பின் நடந்த
‘ஷுட்–ஆப்’ முறையில் 6–5 என வென்ற பாகிஸ்தான் அணி, பைனலுக்கு முன்னேறியது.
நாளை நடக்கவுள்ள பைனலில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதில்,
வெல்லும் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றுவதோடு, 2016ல் நடக்க உள்ள ஒலிம்பிக்
போட்டிக்கும் நேரடியாக தகுதி பெறலாம்.
Comments