மும்பை: நாடு முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்
பிரதமர் நரேந்திரமோடி கிளீன்இந்தியா திட்டத்தை கடந்த வாரத்தில் துவக்கி
வைத்தார். இந்த திட்டம் வெற்றி பெற மோடியோ, மத்திய அரசோ முயற்சி செய்தால்
பயன் அளிக்காது, வெற்றி பெற முடியாது. 125 கோடி மக்களும் இந்த தூய்மை
பணியில் பங்கெடுக்க வேண்டும் என்றார் பிரதமர்.
மேலும் முக்கிய பிரபலங்களான
சச்சின், கமல், பிரியங்காசோப்ரா, அம்பானி, சசிதரூர், யோகா குரு பாபா
ராம்தேவ் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு பிரதமர் தனிப்பட்ட முறையில் அழைப்பு
விடுத்தார். இவர்கள் தங்களின் ஒத்துழைப்பை கிளீன் இந்தியாவுக்கு தரவேண்டும்
என்று கேட்டு கொண்டார். பிரதமரின் இந்த அழைப்புக்கு அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர்கள், போலீசார், அலுவலக அதிகாரிகள், என பலரும் நகர வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட தங்களின் அலுவலர்களை கோர்ட் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தனர்.
இந்நிலையில் சச்சின் பிரதமர் அழைப்பை ஏற்று கையில் சுத்தம் செய்யும் துடைப்பத்துடன் தங்களின் ஆதரவாளர்களுடன் களம் இறங்கினார். மும்பையில் முக்கிய வீதிகளை சுத்தம் செய்தார். பிளீச்சிங் பவுடர் தெளித்தார். இதற்கென சச்சின் முக மாஸ்க், கையில் கிளவுஸ், ஆகியன அணிந்து மிக ஈடுபாட்டுடன் சுத்தம் செய்யும் பணியை செய்தார்.
இது குறித்து சச்சின் கூறுகையில், பிரதமரின் உன்னத நோக்கமான இந்த திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். அவரது அழைப்பின் பேரில் நானும் என்னை ஈடுபடுத்தி கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிளீன் இந்தியா திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
கமல் களம் இறங்குவது எப்போது ? தமிழ்த்திரையுலக முன்னணி நடிகரான கமலும் பிரதமர் அழைப்பை ஒரு மனிதம் என்ற உயர்ந்த எண்ண நோக்கில் தானும் தங்களின் ரசிகர்களும் இந்த பணியில் இறங்குவர் என்று உறுதி அளித்துள்ளார். இருப்பினும் கமல் நேரிடையாக வீதியில் இறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான் '
Comments