பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது நீதியை படுகொலை செய்யும் செயல்: ராமதாஸ்

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் வாதிட, சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை, தமிழக அரசு நியமித்ததில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டிருக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக வாதாடுவது யார்? என்ற வினா எழுந்தது.

'இவ்வழக்கை நடத்தும் வழக்கறிஞரை, கர்நாடக அரசே நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, இவ்வழக்கில் இறுதி மேல்முறையீடு முடிவடையும் வரை பொருந்தும்.ஆனால், தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல், அரசு வழக்கறிஞரை நியமிப்பது எப்படி என, கர்நாடக அரசு தயங்கிக் கொண்டிருந்த நிலையில், அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, இவ்வழக்கை நடத்துவதற்கான அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்திருக்கிறது.

இதனால், ஜெயலலிதாவின் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வரும் போது, அவருக்கு எதிர் தரப்பு வழக்கறிஞராக, பவானி சிங் வாதாடுவது உறுதியாகி விட்டது.

பவானி சிங்கின் கடந்த கால செயல்பாடுகளை பார்க்கும்போது, அவரது நியமனம், இவ்வழக்கின் விசாரணை நியாயமாக நடப்பதை சீர்குலைத்து விடும்.அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம், வழக்கை புலன் விசாரணை மேற்கொண்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இல்லை.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கைத் தொடர்ந்த, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில், இன்னமும் ஜெ., உருவப்படம் தான் அலங்காரமாக மாட்டப்பட்டிருக்கிறது. ஜெ.,யின் ஆதிக்கம் இன்னமும் தலைவிரித்தாடும் ஒரு துறையின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர், அவருக்கு எதிராக வாதிடுவார் என எதிர்பார்ப்பது, மூடநம்பிக்கையின் உச்சமாகும்.கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை படி, அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்த போதே, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்பட்டார்.

வழக்கை இழுத்தடிக்க, ஜெயலலிதாவுக்கு துணை போனதற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதுடன், அபராதத்துக்கும் ஆளானார்.இப்படிபட்டவர் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதிட்டால், அது நீதியை படுகொலை செய்யும் செயல்.இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நீதியை நிலைநாட்டும் பொறுப்பு, தி.மு.க.,வுக்கு உள்ளது. 2011ம் ஆண்டில் சொத்து குவிப்பு வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த அனுமதி கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

அவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜெகநாதன், லஞ்ச ஒழிப்புத் துறையின் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்ச நீதிமன்ற அறிவுரை படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தீர்ப்பளித்தார்.அப்போது நிலவிய சூழலும், இப்போது நிலவும் சூழலும் ஒரே மாதிரியாக இருப்பதால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கை நடத்துவதற்கான, அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை லஞ்ச ஒழிப்புத் துறை நியமித்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments