தமிழகத்தில் தங்கம் விற்பனை உயர்வு: போனஸ் பட்டுவாடா எதிரொலி?

சேலம்: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்கம் விற்பனை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்.,22ல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, தனியார் நிறுவனங்கள், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கான தீபாவளி போனஸ் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது.
தீபாவளி விற்பனையும் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இன்று மதிய நிலவரப்படி தங்கம் கிராம், 2,574 ரூபாய்க்கும், பவுன், 20,592 ரூபாய்க்கும், வெள்ளி கிராம், 40.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


காயின் விற்பனை விர்ர்...:

இந்த சரிவின் காரணமாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தங்க காயின், வெள்ளி காயின், ஒரு கிராம் ஆபரணங்களின் விற்பனையில் சுறுசுறுப்பு காணப்படுகிறது. தீபாவளி போனஸ் பட்டுவாடா நேரத்தில், தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விற்பனை, 25 சதவீதம் வரை, உயர்ந்துள்ளது.

விலை சரிவு:

சேலம் மாவட்ட தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்காக தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், அதற்காக சீட்டு போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த தொகையுடன், போனஸ் பணத்தையும் சேர்த்து, தங்கம் வாங்குவது வழக்கம். சிலர் போனஸ் தொகையை சேமிக்கும் நோக்கில், அதனுடன் மேலும் தொகையை சேர்த்து, தங்க ஆபரணங்களை வாங்குகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, தங்கம் விலை, வரலாறு காணாத வகையில் உயர்வு ஏற்பட்டதால், விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து, தங்கம் விலை சரிந்து வருகிறது.

அதிகரிப்பு:

தற்போது தங்கம் விலை நிதானத்துக்கு வந்துள்ளதால், தீபாவளி பண்டிகைக்காக தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில நாட்களாக தங்க நகை கடைகளில் சராசரி விற்பனையை விட, 20 முதல், 25 சதவீதம் வரை, உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.

Comments