ஒரே அறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி: கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா தகவல்

பெங்களூரு: சிறையில் உடல்நிலை நன்றாக உள்ளதாக, ஜெயலலிதா கூறினார்,'' என, கர்நாடகா சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து, கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறியதாவது:ஜெயலலிதா உடல்நிலை நன்றாக உள்ளது. டாக்டர்கள், அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்ததை விட, பெங்களூருவில், உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜெயலலிதாவே கூறினார்.

சாதாரண அறையிலேயே அவர் உள்ளார். அவருடன், சசிகலாவும், இளவரசியும் உள்ளனர். அந்த அறையில், 'டிவி' வசதி எதுவும் கிடையாது. மின்விசிறி, கட்டில் வசதி மட்டும் உள்ளன. ஜெயலலிதா முன்பிருந்த அறையிலேயே தான் உள்ளார்.டாக்டர்கள் ஆலோசனைப்படி, சிறையிலேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இதுவரை, யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

அதேநேரத்தில், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறையில், அவருடன் சசிகலாவும், இளவரசியும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெங்களூரு சிறைக்கு, அ.தி.மு.க.,வினரின் வரத்து, நேற்று குறைவாக காணப்பட்டது. இதுவரை வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முக்கிய பிரமுகர்களே, நேற்றும் வந்தனர்.லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தேசியக்கொடி, சைரன் பொருத்தப்பட்ட காரில், நேற்று வந்தார். சிறிது நேரத்திலேயே திரும்பி விட்டார். இதே போன்று, எம்.பி., நவநீதகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்களும் வந்தனர்.ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, தேங்காய் விடலை போட, 30க்கும் மேற்பட்டோர், இரண்டு மூட்டைகளில், 101 தேங்காய்களை எடுத்து வந்திருந்தனர். சிறை வாசலில் தேங்காய் உடைக்க, போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் முன், 101 தேங்காய்களையும் உடைத்தனர்.ஜெயலலிதா ஜாமின் மனு, கர்நாடகா ஐகோர்ட்டில், நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமின் பெறுவதில், அ.தி.மு.க., வக்கீல்கள் குறியாக உள்ளனர். நாளை கிடைக்காவிட்டால், 8ம் தேதி வால்மீகி ஜெயந்தி விடுமுறை. அதனால், என்ன செய்வது என்று, அ.தி.மு.க., வக்கீல்கள் கையை பிசைகின்றனர்.

Comments