சென்னை: ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு இயந்திரம்
முடங்கி உள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்வதறியாமல் தவித்து
வருகின்றனர்.
புதிய முதல்வராக, நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
அவருடன், 30 அமைச்சர்கள் பதவியேற்றனர். அன்றே முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி
பழனிச்சாமி ஆகியோருடன் விமானம் மூலம், பெங்களூரு சென்றார்.அவர்களைத்
தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும், பெங்களூரு சென்றனர். நேற்று, தலைமைச்
செயலகத்திற்கு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. அமைச்சர் அறைகள் வெறிச்சோடி
காணப்பட்டன. துறை செயலர்களும், அமைச்சர்கள் இல்லாததால், புதிதாக எந்த
முடிவும் எடுக்க முடியாமல் உள்ளனர். நாளை அரசு விடுமுறை என்பதால், நேற்று
ஊழியர்களும் அதிக அளவு பணிக்கு வரவில்லை.புதிய முதல்வராக, நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
ஜெயலலிதா ஜாமினில் வெளியே வந்த பிறகே, அமைச்சர்கள் தங்கள் பணிகளை கவனிக்க துவங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வருவதை, ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.அதேபோல், கட்சியினரும் முடிவெடுக்க முடியாமல், திணறி வருகின்றனர். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, தொண்டர்கள் தாங்களாக, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அவற்றை முறைப்படுத்த, தகுதியான ஆட்கள் இல்லாததால், பல இடங்களில், போராட்டம் பிசுபிசுக்கிறது. ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற துடிப்புடன், திட்டமிடப்படாத போராட்டங்கள் தொடர்கின்றன.
இதுகுறித்து, உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது:புதிய அமைச்சரவை பதவியேற்றாலும், அனைவரும் பெங்களூரு சென்று விட்டதால், அவர்களை சந்திக்க முடியவில்லை. எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஜெயலலிதா ஜாமின் மனு முடிவுக்கு வந்த பிறகே, அரசு இயந்திரம் செயல்படத் துவங்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Comments