சென்னை :புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான விசாரணைக்காக
நியமிக்கப்பட்ட, நீதிபதி ரகுபதி கமிஷன் முன் ஆஜராகும்படி, பிறப்பித்த
சம்மனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின், துணைப் பொதுச் செயலர், துரைமுருகன் ஆகியோர், மனுக்கள் தாக்கல்
செய்துள்ளனர்.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிதாக தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை கட்டடம் கட்டப்பட்டது.
புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, நீதிபதி ரகுபதி தலைமையில், விசாரணை கமிஷனை நியமித்து, 2011, டிசம்பரில் அ.தி.மு.க., அரசு உத்தரவிட்டது.
கடந்த ஜூன் மாதம், சென்னை மவுலிவாக்கத்தில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மனுத் தாக்கல் செய்தார். மவுலிவாக்கம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, நீதிபதி ரகுபதியை, தமிழக அரசு நியமித்தது.
மாநில நுகர்வோர் நீதிமன்றத் தலைவர், மாநில அறிவுரை குழுமத்தின் உறுப்பினர், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்த விசாரணை என, பல பொறுப்புகள் இருக்கும் ஒருவருக்கு, மீண்டும் பொறுப்பு அளிப்பது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டட விவகாரம் தொடர்பாக, கமிஷன் முன் ஆஜராக, கருணாநிதிக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. கேள்விகளுக்கு பதிலளிக்க, ஆஜராகும்படி, விசாரணை கமிஷனின் செயலர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, 'விசாரணை கமிஷன் தலைவராக, நீதிபதி ரகுபதி தொடர, உரிமையில்லை. அவரை, இந்தப் பணியில் இருந்து விடுவித்து, வேறு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். விசாரணை கமிஷனின் தொடர் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில், கருணாநிதி மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன், விசாரணை கமிஷன் முன் ஆஜராக, கருணாநிதிக்கு விலக்கு அளித்து, விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
தற்போது, வரும், 9ம் தேதி, விசாரணை கமிஷன் முன் ஆஜராக, ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும், 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள், தசரா விடுமுறை முடிந்த பின், அடுத்த வாரத்தில், விசாரணைக்கு வருகின்றன.
Comments