ஊழல் மனித உரிமைகளுக்கு எதிரானது: ஜெ. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறிய தீர்ப்பு

ஊழல் மனித உரிமைகளுக்கு எதிரானது: ஜெ. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கூறிய தீர்ப்பு பெங்களூர்: ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் நீதிபதி சந்திரசேகரா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை தள்ளுபடி செய்த கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி சந்திரசேகரா, அளித்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு: ஊழல் வழக்குகளில் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் அரசு தரப்பு வக்கீல், திடீரென குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் பெரும் ஊழல் செய்தவர்கள் என்பது சாட்சியங்கள் வாயிலாக கீழ் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட் நீதிபதி தனது தீர்ப்பில் மிக விளக்கமாக இந்த தண்டனை எதற்காக என்பதை தெரிவித்துள்ளார். எனவே அரசு தரப்பு வழக்கறிஞர் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தாலும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. லாலுபிரசாத் யாதவ் வழக்கை ஜெயலலிதா வக்கீல் சுட்டிக்காட்டி உடனடியாக ஜாமீன் வழங்க கேட்டார். ஆனால் லாலு பிரசாத் கூட பல நாட்கள் சிறையில் இருந்து தான் ஜாமீன் பெற்றார். ஊழல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. இவர்களுக்கு கருணை காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Comments