தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் 'பாரத தூய்மை' என்ற திட்டம், காந்தி ஜெயந்தி தினமான நாளை துவங்கவுள்ளது.
அதில், தூய்மையின் மகத்துவத்தை விளக்கியுள்ள பிரதமர் மோடி, 'நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 2 மணி நேரம் வீதம், ஆண்டுக்கு 100 மணி நேரமாவது, தூய்மைப் பணிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்; தூய்மையை நேசித்த காந்தியின் பிறந்தநாளில், இந்த இயக்கத்தைத் துவக்குகிறோம்.அந்த நாளில், அரசியல் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம், அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் பிரதமர். இதனை ஏற்று, 'தூய்மை பாரதம்' திட்டத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகின்றன.
தமிழகத்தில், ரயில்வே, தபால் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகளின் சார்பில், 'தூய்மை பாரதம்' இயக்கத்தை நாளை துவக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு, கிராமங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தூய்மைப்பணியை மேற்கொள்ளும் முக்கியப் பொறுப்பிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 'தூய்மை பாரதம்' இயக்கத்தைத் துவக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை சார்பில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எந்த விதமான சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.
ஜெ., சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக, அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட சிறிய இடைவெளி தான், இதற்கு காரணமென்று மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால், புதிய முதல்வர் பொறுப்பேற்ற பின்னும், 'தூய்மை பாரதம்' இயக்க துவக்கவிழாவில் பங்கேற்பது பற்றி, நேற்று வரை எந்த அறிவுறுத்தலும் அரசால் தரப்படவில்லை.அரசு மற்றும் அரசியல் சூழல் காரணமாக, இந்த திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளதா அல்லது வழக்கம் போல், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பகிரங்கமாக பதிலளிக்கத் தயங்குகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட, கூடுதல் நிதியை மட்டும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கும் தமிழக அரசு, விமான நிலைய ஆணையம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சிப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதிலிருந்து, இதுபோன்ற தூய்மைப் பணி வரையிலும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பது, எந்த வகை நியாயமென்று பா.ஜ., கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.நாடு முழுவதும் நாளை இந்த இயக்கம் துவங்கவுள்ள நிலையில், பிரதமரின் அழைப்புக்கு, தமிழக அரசு என்ன பதிலும், மரியாதையும் தரப்போகிறது என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
Comments