இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்

India, West Indies, Second One Day Cricket, Delhi
புதுடில்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான  இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1–1 என சமநிலையை எட்டியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் வென்றது.
இரண்டாவது போட்டி நேற்று தலைநகர் டில்லியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி,  ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் மோகித் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
மந்தமான துவக்கம்: இந்திய அணிக்கு துவக்கத்தில் ஷிகர் தவான் (1) ஏமாற்ற, ரகானே (12), அம்பதி ராயுடு இணைந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 54 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த ராயுடு (32), பென் ‘சுழலில்’ சிக்கினார்.
கோஹ்லி எழுச்சி: இம்முறை நான்காவது வீரராக வந்த விராத் கோஹ்லி, ரெய்னாவுடன் சேர்ந்தார். பேட்டிங்கில் எழுச்சி பெற்ற கோஹ்லி, ஜெரோம் டெய்லர் வீசிய 17வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரெய்னா, டுவைன் பிராவோ ஓவரில் 2 பவுண்டரி, பென் பந்தில் சிக்சர் விளாசினார். ஒருநாள் அரங்கில் 30வது அரைசதம் அடித்த, ரெய்னா 62 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் அசத்திய கோஹ்லி (62), 8 ஒருநாள் போட்டிக்குப் பின் அரைசதம் (31வது) கடந்து திரும்பினார்.
தோனி அசத்தல்: ரவிந்திர ஜடேஜா (6), புவனேஷ்வர் குமார் (18) நிலைக்கவில்லை. கடைசி நேரத்தில் கைகொடுத்த தோனி, தனது 56வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்தது. தோனி (51), முகமது ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஸ்மித் பரிதாபம்: எட்டிவிடும் இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டேரன் பிராவோ (26), போலார்டு (40) நீடிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், கோஹ்லி ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். ஷமி பந்தில் சிக்சர் அடித்த இவர், 97 ரன்னுக்கு போல்டாகி, சதம் அடிக்கும் வாய்பை இழந்து பரிதாபமாக திரும்பினார்.
திடீர் திருப்பம்: இதன் பின் இந்திய பவுலர்கள் அசத்த, போட்டியில்  திருப்பம் ஏற்பட்டது. கடந்த முறை சதம் அடித்த சாமுவேல்ஸ் (16), ராம்தின் (3) ஏமாற்றினர். தனது 8வது ஓவரில், அபாயகரமான ரசல் (4), சமியை (1) அவுட்டாக்கினார் ஜடேஜா. கேப்டன் டுவைன் பிராவோவும் (10) சொதப்ப, இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. மறுபடியும் வந்த ஜடேஜா, டெய்லரை ‘டக்’ அவுட்டாக்கினார். கடைசியில் ராம்பால் (16) அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 
46.3 ஓவரில், 215 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
இந்தியா சார்பில் முகமது ஷமி 4, ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினர்.
45 ரன்...8 விக்.,
நேற்று ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. அடுத்த 8 விக்கெட்டுகளை வெறும் 45 ரன்களுக்கு இழந்து எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.
தொடரும் எதிர்ப்பு      
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கம் (டபிள்யு.ஐ.பி.ஏ.,) இடையே புதிய சம்பள ஒப்பந்தம் கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. இதில், வீரர்கள் சம்பளம் 75 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர். பின், ஒருவழியாக இவர்கள் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட, கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், தங்கள் நாட்டு வீரர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.      
4      
கோஹ்லி, ரெய்னா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் கடந்த ஆகஸ்ட் 2012க்கு பின், 4வது விக்கெட்டுக்கு 100 அல்லது அதற்கு மேல் ரன் சேர்த்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமை பெற்றது.      
‘100’ 
நேற்று இந்தியாவின் ஷிகர் தவானை அவுட்டாக்கிய ஜெரோம் டெய்லர், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம், ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 15வது வெஸ்ட் இண்டீஸ் பவுலரானார். இதுவரை 68 போட்டியில் 102 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Comments